சபரிமலை - ஆர்எஸ்எஸ் நிலைப்பாடே தீபக் மிஸ்ரா தீர்ப்பு டி.எஸ்.எஸ். மணி
சிறப்புப் பார்வை:
ஆர்எஸ்எஸ் நிலைப்பாடே தீபக் மிஸ்ரா தீர்ப்பு
டி.எஸ்.எஸ். மணி
சபரிமலை கோயிலுக்குள் பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற, புழக்கத்தில் இருந்த தடையை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பு மூலம் நீக்கினார்கள். 1991ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட அந்தத் தடையை இப்போது உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், உச்ச நீதிமன்ற நீதியசர்கள், சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கத் தீர்ப்புகளை வழங்கி, அதன் மூலம் சமூகத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் மக்கள் மத்தியிலோ, ஒரு குறிப்பிட்ட பாலினம் மத்தியிலோ வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருப்பதையே காட்டியிருக்கிறார்கள்.
ஆனால், வலதுசாரிக் கருத்துக்கள் நாட்டில் இந்தத் தீர்ப்பை எதிர்க்கின்றன என்பதும், இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சிலர் மேல் முறையீடு செல்லப்போகிறார்கள் என்பதுவும் ஊடகங்களில் செய்திகளாக வருகின்றன. இந்த நேரத்தில், எல்லோராலும் மேற்கோள் காட்டப்படும், அல்லது முற்போக்காளர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்பவர்களால் குற்றம் சாட்டப்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பு இதுபற்றி என்ன கூறியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது..
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லையா?
2016ஆம் ஆண்டே ஆர்எஸ்எஸ் அமைப்பு பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்பதை ஆதரித்து அறிவிப்பே கொடுத்துள்ளது. கேரள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், 1972இல்தான் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற சட்டபூர்வமான நிலைப்பாடு அமலுக்கு வந்தது என்கிறார். அதுவரை, பெண்கள் அந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள் என்கிறார். திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கில், 1991இல் கேரள உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை, நீதியரசர் பரிபூரணம், நீதியரசர் பாலநாராயண மாரர் ஆகியோர் வழங்கினர். அந்தத் தீர்ப்பு, பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள், சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதாக இருந்தது. ஆனால் அதே தீர்ப்பில், திருவிதாங்கூர் ராணி, 1939ஆம் ஆண்டு, சபரிமலை கோயிலுக்குள் வந்து தரிசித்தார் என்ற செய்தியும் சொல்லப்பட்டிருந்தது, என்பதை எழுத்தாளர் மாதவன் இப்போது வெளிப்படுத்துகிறார். அது மட்டுமல்ல. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும், கேரளத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை சபரிமலைக் கோயிலுக்கு கொண்டு வந்து, உணவு சாப்பிடப் பழக்கப்படுத்துவதற்காக, ‘சோறுன்னு’ என்ற விழாவை நடத்துவார்கள் என்றும், அதற்காக சாமி சன்னதிக்குத் தாய்மார்கள் வருவது வழக்கமாக இருந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் செயலாளராக இருந்த ஐயப்ப நாயர் என்பவரும், தான் குழந்தையாக இருக்கும்போது தனது தாயார் ‘சோறுன்னு’ நிகழ்ச்சிக்குத் தூக்கிச் சென்றதையும், தாயாரின் மடியில் இருந்து முதல் சோறு உண்ணும் நிகழ்வு தனக்கும் சபரிமலை சன்னதியிலேயே நடந்ததையும் இன்றும் நினைவுகூர்கிறார்.
அது மட்டுமல்ல. மயூரி என்ற படத்தில் ஒற்றைக் காலுடன் சுதா சந்திரன் நடனம் ஆடிப் புகழ் பெற்றார். அந்த சுதா சந்திரனுடன் ஜெயஸ்ரீ என்ற நடிகை தமிழில் 1986இல் வெளியான நம்பினார் கெடுவதில்லை என்ற படத்தில், நடித்தார்.அந்தப் படத்தில் ஒரு நடனப் பாடலில், இருவரும் சபரிமலை பதினெட்டாம் படியில் நடனம் ஆடுவதாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது அதற்கு தேவஸ்வம் போர்டு ஏழாயிரத்து ஐநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு அனுமதித்தது. இது மட்டும் சாத்தியமா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
ஆர்எஸ்எஸ் கூறியது என்ன?
2016ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த நேர்காணலில்,சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படலாம் என்று அறிவித்ததை இப்போது ஒவ்வொருவரும் நினைவுகூர்கிறார்கள். கேரளாவின் பிரபல ஏடான மாத்ரு பூமி 2016 ஜூலை 25ஆம் நாள் அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதையே, செப்டம்பர் 26 அன்று, கேரள மனோரமா ஏடு வெளியிட்டுளள்து. அந்தச் செய்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்பில் உள்ள ஜனம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதையே, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, போன்ற ஆங்கில ஏடுகளும் வெளியிட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் அறிவிப்பு, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபை எடுத்த முடிவுதான் என்பதையும் இச்செய்திகள் கூறின.
பையாஜி ஜோஷி அப்போது கூறியதாவது: “பெண்கள் இந்தியாவில் உள்ள பல முக்கியக் கோயில்களில் அனுமதிக்கப்படுகிறார்கள் எனும்போது, சபரிமலையில் அனுமதிப்பதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. சபரிமலைக்காகத் தனி நிலைப்பாடு எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்கள் எங்கெல்லாம் அனுமதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளாக அது பழக்கமாக இருக்கிறது என்று கூறுவார்களானால், அது தேவையில்லை எனும்போது அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரையுள்ள பெண்கள்தான் அனுமதிக்கப்படவில்லை என்று இருக்குமானால், அது ஏன் என்று ஆராய வேண்டும்.அது தொடரப்பட வேண்டுமா அல்லது புறந்தள்ளப்பட வேண்டுமா எனப் பார்க்க வேண்டும். பார்ப்பனர் அல்லாத பூசாரிகளை நியமிப்பது நல்ல முன்னுதாரணம். பூசாரிகள் மனதளவிலும், உடலளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும். அவர் எந்த சாதி என்று பார்க்க வேண்டியதில்லை.”
மேற்கண்ட ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தை, கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் ஏற்றுக் கொள்ளவிலை. ஆர்எஸ்எஸ்ஸின் கேரள மாநிலத் தலைவர் பி.ஈ.பி.மேனனும் ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற இடங்களுக்கு ஆர்எஸ்எஸ் கருத்து பொருந்தலாம். ஆனால் சபரிமலைக்குப் பொருந்தாது என்றே அவர் கூறிவந்தார்.
Comments
Post a Comment