திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’ இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது

மனைவியின் காதலனை கணவன் புகார் கொடுத்து தண்டிக்கமுடியும். ஆனால், கணவனின் காதலி மீது மனைவி புகார் கொடுத்து கணவனையும் தண்டிக்கமுடியாது; கணவனின் காதலியையும் தண்டிக்கமுடியாது. இதுதான், 497 சட்டப்பிரிவின் முரண்பாடு.
அதாவது, இந்திய அரசிலைமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கிள்- 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆர்டிக்கிள்-15  பாலின பாகுபாடு கூடாது என்கிறது. ஆர்ட்டிக்கிள்-21 தனிமனித பாதுகாப்பு, சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று உரைகற்களையும் வைத்து இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 497 உரசிப்பார்க்கும்போது… இச்சட்டப்பிரிவு தங்கம் இல்லை. பித்தளையாக பல்லிளிக்கிறது.
இது, தெரியாமல் என்னமோ இப்போது 497 சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபிறகுதான், கணவன் மீது மனைவி புகார் கொடுக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜான்பால் ஃப்ராங்ளின் என்பவர் திருமணத்தை தாண்டிய உறவை தொடர்வேன் என்று சொல்ல… இனி காவல்துறையால் ஒன்றும் செய்யமுடியாது என்று தவறாக நினைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அவரது மனைவி புஷ்பலதா. ஆனால், குடும்ப வன்முறைச் சட்டத்தின்மூலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து தனக்காக நீதியை பெற்றுக்கொள்ளமுடியும். இல்லையென்றால், இதையே காரணமாக காண்பித்து விவாகரத்து பெற்றிருக்கலாம். இதற்காக, பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது” - இதைத்தாண்டி இன்னும் விரிவான தகவல்களுடன் இன்று( 2018 அக்டோபர்-3 ந்தேதி) வெளியான நக்கீரன்...
==========================================================================
திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு...
//தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..//
20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்,
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத்
தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளவுமே பயன்படப் போகிறது. அதைத் தாண்டி ஒரு பயனும் இல்லை.
வயதுக்கு வந்தோர் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் அது அவர்கள் உரிமை என்பது சட்டமானால், பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களைக் கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது?
தன் மகளோ மகனோ எவனோடும் எவளோடும் சுற்றிவிட்டு வந்தாலும் தாய்தகப்பன் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறதா நீதி மன்றம்?
இதைப் பெற்றவர்கள் ஏற்கப் போகிறீர்களா?
படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று ஊர்மேய்ந்து கொண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்குத் தேவைப்பட்டால், விருப்பம் இருந்தால் உடலுறவே கொள்ளலாம் என்பது தலைமுறைகளை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?
கல்யாணம் ஆன ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவரோடு உறவு கொள்வதற்கு ஏன் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படியே பிடித்தவர்களோடு போகலாமே. தினம் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கணவன் போவான். மனைவி கேட்பதற்கில்லை.
தினம் ஒருவனைப் பிடித்திருக்கிறதென்று மனைவி விபசாரமும் செய்யலாம். கணவனும் கேட்பதற்கில்லை. என்றால் அதென்ன வீடா, குடும்பமா?. அல்லது விபசார விடுதியா?
வீடுகளை விபசார விடுதிகளாக்கிப், பெண்களை விபசாரிகளாக்கி, ஆண்களை மேலும் ஒழுக்கம் கெட்டலைய வைப்பதுதான் நீதித் துறையின் நோக்கமா?
கணவன் இருக்க, அடுத்தவனைப்
பிடித்திருக்கிறதென்று எத்தனைப் பேரோடும் உறவு கொள்ளும் பெண்ணுக்குத் தனது கணவன் தன் கண்முன்னால் செத்தாலும் இழவுக்குக் கண்ணீர் வருமா? பெற்ற பிள்ளைகளிடம் இனிப் பாசம் வருமா? அன்பே அங்கு அற்றுப் போய்விடில் குடும்ப வாழ்க்கை இனிக்குமா? இருக்குமா?
இந்தத் தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும், எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றும் ஆதரவளிப்பவர்கள், அவர்கள் மனைவிகளையும் சகோதரிகளையும் அடுத்தவரோடு படுக்க அனுப்பிவிட்டு விவாதம் நடத்தட்டும்.
மனைவி மீது உரிமையில்லை. பிள்ளைகள் மீது உரிமை இல்லை. சகோதரிகள்மீது உரிமை இல்லை என்றால், எதன் மீதுதான், எவர் மீதுதான், எவருக்குத்தான் இங்கு உரிமை இருக்கிறது?
விருப்பப்பட்டால் வயதுக்கு வந்தவர்கள் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று அங்கீகரிக்கப் பட்டுவிட்ட நாட்டில், பெண்கள் இனி எப்படிப் பார்க்கப் படுவார்கள்? எப்படி நம்பப் படுவார்கள்?
இது தப்பென்று தட்டிக் கேட்க கணவன், மனைவி, பெற்றோர்கள் உண்டு என்ற நிலையிலேயே ஆயிரம் அவலங்கள் நடந்த நாட்டில் இனி தப்பில்லை அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றாகிவிட்டால், யார் யாருக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கு வாழ்க்கை வாழப் போகிறார்கள்? கேட்க உரிமை இருந்த போதே நல்ல மனைவிகளும் சந்தேகத்திற்கு உள்ளாகி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்க, இனி அது அவரவர் சுதந்திரம் என்ற பிறகு எத்தனை உத்தமமான பெண்கள் வாழ்க்கையை இழக்கப் போகிறார்களோ!
காதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும் என்று உண்மையாய் விரும்புகிறவர்களுக்கும் இனி அந்த வாழ்க்கை கிடைக்குமா அல்லது கிடைத்தாலும் நிலைக்குமா?
பொது வெளியில், இதிலென்ன இருக்கிறது அதுவும் ஓர் உணர்ச்சிதானே விருப்பம்தானே என்று யாரும் பேசலாம். அப்படிப் பேசும் யாரும் தம் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால்
அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா என்று கூறும் அல்லது, அவனை தன் வீட்டுக்கே அழைத்து மனைவியின் உடம்புப் பசியை ஆசையை தீர்த்து வைக்கச் சொல்லி கட்டிலுக்கு அவனை அனுப்பி அழகு பார்க்கும் மனோதிடம் உள்ளதா?
குடும்ப வாழ்க்கை என்றான பிறகு, தனி மனித உரிமை எங்கே இருக்கிறது? கணவன் தவறாகப் போனால், மனைவி குழந்தைகள் வாழ்க்கைச் சீரழியாதா? மனைவி தவறாகப் போனால் கணவன் பிள்ளைகள் வாழ்க்கை கெடாதா? தன்னுடைய எந்தச் செயலின் எதிர் விளைவுகள் அடுத்தவரைப் பாதிக்காதோ அதுவே தனி மனிதச் சுதந்திரம். மற்றதெல்லாம் வரம்புக்கு உட்பட்டது என்பது நீதித் துறை அறியாதா?
பெண்ணின் ஒழுக்கக் கேட்டை விமர்சித்து ஓரெழுத்தெழுதினால் கொந்தளிக்கும் பத்தினிகள் என்னிடம் கோபிப்பதில் நியாயமில்லை. ஏதோ ஒட்டுமொத்த பெண்களும் விபசாரிகள்போல் எண்ணி யாரும் யாரோடும்
படுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்துள்ள நீதித் துறைமுன் கோபப்படுங்கள் அத்தனைக் கற்புக்ககரசிகளாக நீங்கள் இருந்தால்!
வயதுக்கு வந்த யாரும் யாரோடும் விரும்பினால் படுக்கலாம் என்பது இந்து மக்களுக்கான சட்டமா இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? இதை இஸ்லாத்தும் கிறித்துவமும் இந்து மதமும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?
பாலியல் சுதந்திரம் எல்லோர்க்கும் உண்டு யாரும் யாரோடும் புணரலாம் எனில், இது இரத்த சம்பந்தமுள்ள உறவுகளுக்கும் பொருந்துமா? ஏனெனில், மேல் நாட்டுக் கலாசாரம் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்த்தும், குடும்ப உறவுகளுக்குள்ளேயே பாலுறவு கொள்ளும் வேட்கை பெருகி(incest sex) வெறியாகி மகளையே தகப்பனும், மருமகளையே மாமனாரும், சகோதரியையே சகோதரர்களும், சகோதரி கணவன், சகோதரன் மனைவியோடே புணர்ச்சியிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுவது எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு, இப்படியும் உறவு முறை பாராமல் உறவாட உரிமை அளிக்கிறதா?
தீர்ப்பு திரும்பப் பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் செங்கல் செங்கல்லாகப் பிரிக்கப் படவேண்டும் அதுவே முடிவு.
தன் குடும்பம், பிள்ளைகள், மனைவி, கணவன், சகோதர சகோதரிகள் ஒழுக்க வாழ்வு வாழ்ந்து உயரவேண்டும் என்று விரும்புகிறவர்களும்,
காலம் காலமாக தன் இனம் தன் மதம் கட்டிக்காத்த அழகான நெறி மிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களும் மற்றும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இந்தத் தீர்ப்புக் எதிராகப் போராடுவார்கள். இல்லையேல், நாடும் வீடும் மக்களும் எதிர்காலச் சந்ததிகளும், நாம் காத்த பண்பாடும், மத ஆன்மிக தெய்வக் கோட்பாடுகள் சகலமும் நம் கண்முன்பே சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டியவர்கள் ஆவோம்!
Fight Against the Constitution IPC 497 & 377
-=================================================================
திருமண முறையே விபச்சாரமாக இருக்கும்போது அதற்குள் ஏது விபச்சாரம்?

நீதிமன்றங்கள்  பெண்ணுரிமை  பண்பாட்டு விவாதங்கள்
திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு கலாச்சாரக் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீர்ப்பு ஆகா ஓகோ என்று மெச்சத்தகுந்த தீர்ப்பு இல்லை என்றாலும், மதம் சார்ந்தும், சாதி சார்ந்தும் கட்டமைக்கப்பட்டுள்ள ஆணாதிக்க குடும்ப உறவில் ஓர் உடைசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்தவனின் மனைவியுடன் கள்ளத்தனமாக பாலியல் உறவில் ஈடுபவதை இந்தத் தீர்ப்பு பகிரங்கமாக ஆதரிக்கின்றது, இதனால் நாட்டில் கலாச்சாரச் சீரழிவு ஏற்படும் என மதவாதிகளும், சாதியவாதிகளும் கூக்குரல் இட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சில முற்போக்குவாதிகளும் இந்தத் தீர்ப்பை ஆதரிப்பதா, இல்லை எதிர்ப்பதா என தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
hug coupleஇந்தக் குடும்ப அமைப்பு முறையையும், திருமண முறையையும் நாம் புரிந்து கொள்ள முற்படும்போதுதான் இந்தத் தீர்ப்பு எந்த மாதிரியான சமூக விளைவை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடிப்படையில் எதற்காக ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழ வேண்டும்? எதற்காக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்? எதற்காக அந்தக் குழந்தைகளை மெனக்கெட்டு வளர்க்க வேண்டும்? போன்ற கேள்விகளைக் கேட்டால் அனைத்து கேள்விகளுக்கும் அடிப்படையான பதிலாக அமைவது சொத்துடமைதான். தனிச்சொத்தைப் பாதுகாக்கவே இந்த ஏற்பாட்டை சமூகம் செய்துள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பில்தான் இந்தக் குடும்ப உறவுகள் இருந்தன என்றில்லை, எப்போது தனிச்சொத்து இந்தச் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டதோ, எப்போது அது சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டதோ அப்போதில் இருந்தே இந்தக் குடும்ப அமைப்பு உருவாகி வேர்கொண்டுவிட்டது.
இந்தக் குடும்ப அமைப்பிற்குக் கட்டாயமாக பெண் தேவைப்படுகின்றாள். எதற்காக என்றால் இந்தத் தனிச்சொத்தை உருவாக்கும் பொறுப்பையும், அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பையும் தன்னுடைய ஆஸ்தான உரிமையாக எடுத்துக் கொண்ட ஆணுக்கு அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அவனது ரத்த வழியில் குழந்தைகளை பெற்றுக் கொடுக்கவும், அவனையும் அவனது குழந்தைகளையும் பராமரிக்கவும் கட்டாயமாக அவள் தேவைப்படுகின்றாள். அதைத் தாண்டி அவளுக்கு இந்தச் சமூகத்தில் வேறு பணிகளும் கிடையாது, வேறு உரிமைகளும் கிடையாது. அவள் ஓர் ஆணுக்கு விலை கொடுத்து விற்கப்படுகின்றாள். அந்தப் பெண்ணை சாகும்வரை தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ள அந்த ஆணுக்கு திருமணத்தின் மூலம் உரிமை அளிக்கப்படுகின்றது. அடிப்படையில் பார்த்தால் இந்தத் திருமண முறையே ஒரு விபச்சாரத்தனம் நிறைந்ததாகும். அதில் பெண் ஒரு பண்டமாக ஓர் ஆணுக்கு கையளிக்கப்படுகின்றாள். தான் திருமணம் செய்து கொள்ளும் ஆணின் விருப்பம் என்னவோ அதுதான் இனி அவளின் விருப்பமும். அவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் இருக்கக்கூடாது. உரிமைகளைப் பற்றிய பேச்சே கிடையாது.
இங்குதான் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கான அடிப்படையே இருக்கின்றது. தன்னை உரிமையாக்கிக் கொண்ட ஆண் ஒரு குடிகாரனாகவோ, இல்லை ஆண்மை இல்லாதவனாகவோ, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் திராணியற்ற கையாலாகாத பேர்வழியாகவோ இருக்கும்போதும் அல்லது தான் நினைத்த வாழ்க்கையை சிறிதுகூட தனக்குக் கொடுக்கத் துப்பற்றவனாக இருக்கும்போதும், அந்தப் பெண் தனக்குப் பிடித்தவனுடன் வாழ முற்படுகின்றாள். இந்தச் சமூகம்தான் அவளை கள்ளத்தனமாக வாழ நிர்பந்திக்கின்றது. அதனால்தான் அவள் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் சட்டப் பூர்வமற்ற வழிகளில் நிறைவேற்றிக்கொள்ள முற்படுகின்றாள்.
எந்தவிதப் பொருளாதார பலமும் இன்றி பெண்ணை வைத்திருக்கும் இந்தச் சமூகம் தான் அவளின் நடத்தைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சாதிய கெளரவமும், மத கெளரவமும், அவளை ஒரு சுமையாக அழுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளும் அவளைக் கள்ளத்தனமாக தனக்குப் பிடித்த இன்னொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள நிர்பந்திக்கின்றது. ஒருவேளை இது அம்பலமாகும்போது முதலில் பாதிப்படைவது பெண்கள்தான். 497 சட்டப்பிரிவின் படி திருமணத்திற்கு வெளியே அடுத்தவன் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, இல்லை அபராதமோ வழங்கப்பட்டு வந்தாலும், இது போன்ற பிரச்சினைகள் காவல்நிலையத்திற்குப் போவது ஆணாதிக்க சமூக அமைப்பில் மிக மிகக் குறைவே. தன்னுடைய மனைவி அடுத்தவனுடன் உறவு வைத்திருந்தாள் என்று எந்த ஆணும் நிச்சயமாக காவல்நிலையம்வரை சென்று புகார் கொடுக்கத் துணிய மாட்டான். காரணம் அது சமூகத்தில் தன்னைப் பற்றிய பிம்பத்தை உடைத்துவிடும் என்ற பயம்தான் காரணம்.
“இவன் ஒழுங்காக இருந்திருந்தால் அவள் ஏன் அடுத்தவனைப் பார்க்கப் போகின்றாள்” என்ற வசையை பெரும்பாலும் தவிர்க்கவே அனைத்து ஆண்களும் விரும்புவார்கள். அதனால் அவனிடம் உள்ள கடைசி வழி ஒன்று தன்னைவிட்டு அடுத்தவனுடன் தவறான உறவு கொள்ளும் பெண்ணைக் கொன்று விடுவது அல்லது வீட்டைவிட்டு துரத்தி விடுவது. இரண்டில் ஒன்றுதான் நிச்சயமாக நடக்கும். இதைத்தாண்டி சட்டப்படி தன் மனைவியுடன் உறவில் ஈடுபட்டவனுக்கு தண்டனை வாங்கித் தர போராடுவது எல்லாம் அரிதாகவே நிகழும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பின் படி இனி ஆண்களைத் தண்டிக்க முடியாது என்பது முற்போக்காக இருந்தாலும் இந்தச் சமூக அமைப்பு மாற்றி அமைக்கப்படாத வரையில் இந்தத் தீர்ப்பால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியாது. “கணவன் என்பவர் பெண்களின் எஜமானர் அல்ல” என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் நடைமுறையில் பெண்கள் ஆண்களின் சொத்தாகவே, ஒரு பண்டமாகவே இருக்கின்றார்கள். நடைமுறையில் சொத்து என்பது ஆண்களின் உரிமையாக இருக்கும் வரையிலும், திருமணம் என்பது விபச்சாரத் தனமாக இருக்கும் வரையிலும், இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதற்கெல்லாம் தீர்வு என்பது தனிச்சொத்தை ஒழித்தல் என்பதில்தான் இருக்கின்றது. மார்க்சிய மூலவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் இந்தப் பிரச்சினையில் நமக்கு தெளிவான ஓரு தீர்வு கிடைக்கும்.
“ஆண், பெண் ஆகியோருக்கிடையே ஏற்படும் உறவானது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றும், அதில் சமுதாயம் தலையிடக்கூடாது என்றும் அது மாற்றிவிடும். தனியுடமையை அகற்றி விடுவதன் மூலமும் குழந்தைகளுக்குச் சமூக கல்வி அளிப்பதன் மூலமும் இவற்றின் விளைவாக குழந்தைகள் தங்களது பெற்றோரைச் சார்ந்து நிற்பது, மனைவி தனது கணவனைச் சார்ந்து நிற்பது ஆகிய தனியுடைமையின் விளைவாகத் தோன்றிய இருவகையான திருமண அடிப்படைகளை அகற்றி விடுகின்றது” (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்:எங்கெல்ஸ்)
“தற்காலக் குடும்பத்துக்கு, பூர்ஷ்வாக் குடும்பத்துக்கு அடிப்படையாக இருப்பது எது? மூலதனம்தான், தனியாரின் இலாபம்தான். முழுவளர்ச்சியடைந்த வடிவத்தில் இந்தக் குடும்பம் பூர்ஷ்வாக்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஆனால் இந்த நிலையை, பாட்டாளிகளின் வலுக்கட்டாயமான குடும்பமற்ற நிலையும், பொது விபச்சாரமும் முழுமைப்படுத்துகின்றன. பூர்ஷ்வாக் குடும்பத்தை முழுமைப்படுத்துவது மறைந்து போகும் போது, கூடவே பூர்ஷ்வாக் குடும்பமும் இயல்பாகவே மறைந்துவிடும்; மூலதனம் மறையும்போது இரண்டும் மறைந்து விடும்”.
“பூர்ஷ்வா தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கின்றார். உற்பத்திக் கருவிகள் எல்லோர்க்கும் பொதுவானவையாகப் பயன்படுத்தப்படப் போவதாக கேள்விப்படும் அவர், இதே போல எல்லோருக்கும் பொதுவாகிவிடும் கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயல்பாகவே முடிவு செய்து கொள்கின்றார். பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை வழக்கற்றதாகச் செய்வதுதான் பிரச்சினை என்பதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை”
நமது பூர்ஷ்வாக்கள், சட்டப்பூர்வமான விபச்சாரத்தை நாடுவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பாட்டாளிகளின் மனைவியர், பெண் மக்கள் ஆகியோரை வைத்துக் கொள்வதுடன் நிற்காமல், தமக்குள் ஒருவர் மனைவியை இன்னொருவர் வசப்படுத்தி அனுபவிப்பதில் பேரின்பம் காண்கின்றார்கள். பூர்ஷ்வாத் திருமணம் என்பது உண்மையில் மனைவியரைப் பொதுவாக அனுபவிக்கும் ஒரு முறைதான். போலித்தனமாக மூடி மறைக்கப்பட்டுள்ள முறையில் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறைக்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் சட்டப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்றுதான் அவர்கள் மீது அதிகபட்சக் குற்றம் சாட்டலாம். மேலும், இன்றைய பொருளுற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படும்போது, இந்த உறவுகளிலிருந்து எழும் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறையும், அதாவது சட்டப்பூர்வமான, சட்டப்பூர்வமற்ற விபச்சாரமும் மறையும் என்பது சொல்லாமலே விளங்கும்”. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: மார்க்ஸ்)
எனவே தனிச்சொத்துரிமை ஒழிக்கப்படும்வரை பெண்களை ஒரு பாலியல் பண்டமாகவும், ஆணின் சொத்தாகவும் பார்க்கப்படும் சமூகத்தின் பார்வை என்பது மாறாது. இந்தத் தீர்ப்பு ஓரளவிற்கு முற்போக்கானதாக இருந்தாலும் இந்தத் தீர்ப்பை அமுல்படுத்தும் அமைப்புகள் எந்த அளவிற்கு முற்போக்காக இருக்கின்றது என்பது முக்கியமானதாகும். குறைந்தபட்சமாக பெண்களை விலை பேசி விற்கும் இந்த விபச்சார திருமண முறை ஒழிக்கப்பட்டால் கூட பெண்களுக்கு ஓரளவு விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சாதிய சிந்தனையிலும், மதவாத சிந்தனையிலும் ஊறிப்போன இந்த சமூகம் அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான். பெண்களின் விடுதலைக்காக பல முற்போக்கான கட்டங்களை இந்தச் சமூகம் கடக்க வேண்டி இருக்கின்றது. அவர்களுக்கு எது எல்லாம் சுமையாக, விலங்காக இருக்கின்றதோ அவை எல்லாம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட பெரும்பணியில் ஒரு சிறு ஆறுதலை மட்டுமே இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கின்றது.
- செ.கார்கி
fShare  
inShare
Save
அடுத்த

Comments  
0 #1 கணேஷ் 2018-09-30 00:26
ஓர் ஆண் மற்றும் பெண்ணின் தனிப்பட்ட உறவில் தலையிட சட்டத்திற்கு உரிமை இல்லை என்ற வகையில் இந்தத் தீர்ப்பு வரவேற்க்கத்தக்க தே. கள்ளக் காதல் என்பது ஒரு நம்பிக்கை மீறல், அந்தப் பெரும் தவறுக்குத் தண்டனை அளிக்க வேண்டியது அந்தந்த நபரைச் சார்ந்தவர்களே அன்றி சட்டம் அல்ல.
Quote | Report to administrator
0 #2 வேலன் 2018-09-30 15:11
வரவேற்க வேண்டிய தீர்ப்புதான். மனமொத்து வராத நிலையில், விவாகரத்து செய்து கொள்ளும் வசதி இருக்கும் நிலையில், திருமண பந்தத்தை மீறிய உறவைக் குற்றமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. விவாகரத்து சட்டத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும்.
Quote | Report
=================================================================
திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’

 இந்தியா October 1, 2018  ஆசிரியர்குழு‍ மாற்று
‘adultery’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்ததைப் போலக் ‘கலாசாரக் காவலர்கள்’, ‘குடும்ப அமைப்பு’ச் சிதையக்கூடாது என்று அஞ்சுபவர்கள், பெண்ணின் ‘கற்பை’ காக்க அயராது உழைப்பவர்கள் என்று பலரையும் சூடேற்றி இருக்கிறது. இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் தொடுக்கப்பட்ட வழக்கையும், அவர்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்பதையும் பொறுமையாகத் தெரிந்து கொண்டால் பாதிப் பேர் அமைதியாகி விடுவார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீக்கப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது:
வேறொரு ஆணின் மனைவி என்று தெரிந்த அல்லது மனைவி எனத்தான் நம்புவதற்கு உரிய ஒரு நபரோடு, சம்பந்தப்பட்ட நபரின் கணவனின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல் உடலுறவு கொள்கிற ஆண் -(இந்த உடலுறவு பாலியல் வன்புணர்வு குற்றமாக இல்லாத பட்சத்தில்) adultery குற்றத்தை புரிந்தவர் ஆகிறார், இந்தக் குற்றத்தை புரிந்தவர் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளுக்கும் ஒருங்கே உரியவர் ஆகிறார். குற்றத்தை தூண்டியவர் என்று மனைவியைத் தண்டிக்கக் கூடாது.
குழப்புகிறதா? சுருக்கமாக இச்சட்டம் சொல்வது இதுதான்: வேறொரு ஆணோடு மணமான ஒரு பெண்ணோடு பாலியல் வன்புணர்வு அல்லாத உடலுறவில் (அதாவது பெண்ணின் விருப்பத்தோடு கொள்ளும் உடலுறவு என்று பொருள் கொள்ளலாம்) ஈடுபடும் ஆண் ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதத்துக்கு உரியவர். இதில் வருகிற முதல் வரி இன்னமும் கவனத்துக்கு உரியது – கணவனின் அனுமதி, விருப்பம் இன்றி உடலுறவு கொள்வது குற்றம். கணவனின் அனுமதியோ, விருப்பமோ பெற்று உடலுறவு கொண்டால் குற்றமில்லையா என்று ஐயம் ஏற்படலாம். அப்படிக் கணவனின் விருப்பமும், அனுமதியும் இருந்தால் அது adultery குற்றம் ஆகாது என்றே சட்டம் சொல்கிறது. இந்த வரிகள் தெரியாமலோ என்னவோ இந்தச் சட்டத்தைப் பெண்ணுக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்!
இன்னொரு சிக்கலும் இருக்கிறது. மேற்சொன்ன சட்டத்தின் படி யார் adultery குற்றத்திற்காக நீதிமன்றப் படி ஏற முடியும் என்று சட்டம் என்ன சொல்கிறது எனக்காண்போம். பெரும்பாலான கிரிமினல் குற்றங்களில் யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என்பதே பொது விதி. அதற்கு விதிவிலக்காக இருப்பவை குறித்து Cr.P.C 190-199 வரையறுக்கிறது. இதில் திருமணம் சார்ந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்குத் தொடரமுடியும் என்று 198(1) தெரிவிக்கிறது. யார் பாதிக்கப்பட்டவர் என்பதைப் பிரிவு 198(2) சொல்கிறது. அது என்ன சொல்கிறது என்றால், பிரிவு 497 அல்லது 498-ல் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது பெண்ணின் கணவரை மட்டுமே குறிக்கும். ஒருவேளை இந்தக் குற்றம் நடைபெறும் போது கணவர் அங்கே இல்லை என்றால், நீதிமன்றத்தின் அனுமதியோடு அப்பெண்ணைப் பார்த்துக்கொள்ளும் நபர் கணவனின் சார்பாக வழக்கு தொடர முடியும்.
அதாவது, Adultery சட்டத்தின் கீழ் திருமணமான ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆண் மீது பெண்ணின் கணவரோ, அல்லது அவரின் அனுமதியோடு அவரின் சார்பாக அனுமதிக்கப்பட்டவரோ தான் வழக்கு தொடர முடியும். கொஞ்சம் உற்றுக் கவனித்தால்,இதில் இருக்கும் விதிவிலக்குகள் அதிர்ச்சி தரும். மணமான பெண்ணோடு வேறொரு ஆண் மேற்கொள்ளும் உறவு தான் ‘adultery’ ஆகிறது. மணமான ஆண் மணமாகாத பெண்ணோடு கொள்ளும் உடலுறவு ‘adultery’ கீழ் வராது. மனைவி சம்பந்தப்பட்டிருக்கும் உடலுறவு முறையற்ற உறவாகிறது. ஆனால், மணமாகாத பெண்ணோடு கணவன் கொள்கிற உடலுறவு கிரிமினல் குற்றமில்லை. அதற்காக நீதிமன்ற படியேறி, ஐந்தாண்டு சிறைத்தண்டனையைக் கணவனுக்குப் பெற்றுத்தரும் உரிமையும் பெண்ணுக்குக் கிடையாது. அதேபோல, பெண்ணை ‘adultery’ குற்றத்தில் ஈடுபட்டார் என்று தண்டிக்க முடியாது. சட்டத்தின் பார்வையில் அவர் பாதிக்கப்பட்டவர். ஆண் தான் பாலியல் உறவை தீர்மானிப்பவன், பெண் என்பவள் அவன் சொல்வதைக் கேட்டு நடப்பவள் மட்டுமே என்கிற விக்டோரியா காலத்து ஆங்கிலேய பார்வையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் இது. பெண்ணுடன் கணவன் விரும்பிய போதெல்லாம் உடலுறவு கொள்ள முடியும், அதற்கு முழுக்கப் பெண் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று ‘conjugal rights’ ஐ முழுக்கக் கணவனுக்கு மட்டுமே வழங்கிய ஆங்கிலேயர் காலத்துச் சட்டத்தை எதிர்த்து ‘ருக்மாபாய்’ என்கிற மருத்துவப் பயின்ற பெண் தொடுத்த வழக்கை படித்துப்பாருங்கள். http://cscs.res.in/dataarchive/textfiles/textfile.2007-09-20.5610179936/file இதன் நீட்சியாகத் தானோ என்னவோ இன்றும் மணமான பெண்ணின் அனுமதியில்லாமல் கணவன் கொள்ளும் உடலுறவை வன்புணர்வு என்று கருத மறுக்கிறோம்.
ஆக, adultery சட்டத்தால் பெண் தண்டிக்கப்படவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை ஆண்கள் மணமாகாத பெண்ணோடு கொண்ட உறவையும் adultery சட்டம் தண்டிக்கவில்லை என்பதும். அதே போல, மணமான பெண்ணோடு தன்னுடைய கணவன் உறவு வைத்துக்கொண்டாலும் அதற்காக அவருடைய மனைவி நீதிமன்ற படியேற முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணுடைய கணவன் மட்டும்தான் நீதிமன்ற படியேற முடியும். இதனால் தான் இந்தச் சட்டம் ‘பெண்ணைக் கணவனின் அடிமையாகப் பார்க்கிறது’ என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கக் காரணம்.
இதற்கு முன்பு இந்த ‘adultery’ சட்டத்தை ஒட்டி மூன்று முறை உச்சநீதிமன்ற படிகள் தட்டப்பட்டிருக்கின்றன. முதல் வழக்கு யூசப் அஜீஸ் எதிர் பம்பாய் மாநிலம். இந்த வழக்கில் பெண் ‘adultery’ புரிய உரிமம் தருகிற சட்டமாக இது இருக்கிறது என வாதிடப்பட்டது. பெண்ணைத் தண்டிக்காமல் இருப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15(3) பெண்கள், குழந்தைகளுக்குச் சிறப்புச் சட்டங்களை மத்திய அரசு இயற்றலாம் என்பதன் படி செல்லும் எனத்தீர்ப்புத் தரப்பட்டது. அதே வழக்கில், ‘ஆண் தான் பெண்ணை வசியம் புரிபவன், பெண்ணல்ல என்பது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று’ என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
அடுத்த வழக்கு சௌமித்ரி எதிர் இந்திய ஒன்றியம். இந்த முறை எப்படிக் கணவன் மீது மனைவி adultery சட்டத்தின்படி நீதிமன்ற படியேற முடியாதோ, அதே போலக் கணவனும் adultery சட்டத்தின் படி நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது! அதாவது adultery என்பது ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எதிராகப் புரியும் குற்றம் மட்டுமே.
இறுதியாக, 1988-ல் நடந்த ரேவதி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், adultery வழக்குகளில் பெண்கள் மீது வழக்கு தொடர் அனுமதி மறுக்கப்படுவது ‘சமூக நலனை’ வளர்த்தெடுக்கிறது. திருமணம் என்கிற உறவின் புனிதத்தை மீட்டெடுக்கவும், காக்கவும் அது உதவுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது. முத்தாய்ப்பாக, adultery சட்டம் கேடயம் மட்டுமே, அது வாள் அல்ல என்றது. அதாவது மனைவியின் ‘கற்பை’ காக்க உதவும் கேடயமே இந்தச் சட்டம்.
இப்போது தற்போதைய தீர்ப்புக்கு வருவோம். adultery எனப்படும் திருமணத்திற்கு வெளியே கொள்ளும் உறவை விரும்பியபடி வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதைக் கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டியதில்லை, சிவில் பிரச்சினையாகக் கருதி விவாகரத்து முதலிய தீர்வுகளை நாடலாம் என்றே தலைமை நீதிபதி தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிமன்றம் இரு நபர்கள் கொள்ளும் உடலுறவு தனிப்பட்ட் அக உரிமையாகும், அதனைச் சமூகப் பிரச்சினையாகக் கருதி கிரிமினல் தண்டனை விதிப்பது தவறு என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. அதாவது மற்றவர்களின் படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பது உங்களின் வேலையில்லை என்றிருக்கிறது.
நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் ‘திருமண அமைப்பில் அடக்குமுறை குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்படுகிறது. கட்டிக்காக்கப்படும் ஆணாதிக்க அமைப்புகளும், பெண்களை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்புத் தங்களுக்கு உரியது என்கிற ஆண்களின் கனவுவாதமும் பெண்கள் சமமான வாழ்க்கை வாழவிடாமல் தடுக்கின்றன… அரசியலமைப்பு உரிமைகளை அமல்படுத்துவதைப் பொறுத்தவரை அக,பொது வெளிகள் என்கிற வேறுபாடுகள் கிடையாது. திருமண உறவு என்கிற நெருக்கமான தனிப்பட்ட வெளியும் அரசியலமைப்பின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது இல்லை. பெண்கள் பாலியல் சுயாட்சியை, பெண்கள் கணவனுக்குக் கட்டாயமாக நேர்மையாக இருக்க வேண்டும் என்பதன் மூலம் கட்டுப்படுத்துகிறோம். இது அடிப்படை உரிமைகளான கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது’ என்றிருக்கிறார்.
நீதிபதி இந்து மல்கோத்ரா, ‘எதோ adultery என்பது கணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல மட்டும் அணுகப்படுகிறது. அவனின் சொத்து திருடு போனதற்காகத் திருடியவனைத் தண்டிக்க ஒரு செயல்பாடாகத் திகழ்கிறது’ என்று எழுதியதன் மூலம் மனைவி எதோ சொத்து போல நடத்தப்படும் இந்தச் சட்டத்தைக் குப்பைக்கூடைக்கு அனுப்ப வேண்டிய அவசியத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். தலைமை நீதிபதி, ‘adultery தான் மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்குக் காரணம் என்பதைவிட, மகிழ்ச்சியற்ற திருமணத்தினால் விளைவதே adultery எனக்கருதலாம். மகிழ்ச்சியற்ற திருமணத்தில் வாழும் ஒருவரை தண்டிப்பதற்கு ஒப்பாகும் இச்சட்டத்தின் படி தண்டிப்பது’ என்று கூறியிருக்கிறார்.
திருமண உறவை நாம் எப்படிக் கட்டிக்காக்க விரும்புகிறோம்? அடக்குமுறை, கற்பு என்கிற கத்தியை கொண்டு மிரட்டுவது, ஐந்தாண்டு தண்டனை இப்படியா? அன்பும், மகிழ்ச்சியும், ஊடலும், கூடலும் நிறைந்து பயணிப்பது தானே சமத்துவமான இல்லறம்? அதனை ஒரு ஆங்கிலேயர் காலத்து அரதப்பழசான சட்டத்தின் மூலம் கட்டிக்காப்பாற்றி விட முடியும் என்று எண்ணுவது எத்தனை பிற்போக்குத்தனமானது. ஆணும், பெண்ணும் இணைந்து இயங்கும் சமமான உறவாகத் திருமணங்கள் மாற உரையாடலும், இருதரப்பு நம்பிக்கையும் அவசியம்.
மனைவியைச் சொத்தாக, ஏன் பெண்ணையே சுய பாலியல் தேர்வும், விருப்பங்களும் இல்லாத ஒரு உயிரற்ற பொருள் போலக் கருதும் சட்டம் ஏன்  ஆண்களாகிய நம்மைக் கோபப்படுத்தவில்லை என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். படுக்கைக்கு மட்டுமே பெண் என்கிற எண்ணம் எங்கேயோ ஒளிந்து கொண்டிருப்பதால் தான், பெண்ணின் படுக்கையறை தேர்வில் தான் திருமண உறவே ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று அதனைக் கட்டுப்படுத்த இத்தனை எத்தனிப்புகள். இது செல்லாது! விடுதலை வெளிகள் பாய்ந்து எழும் கணங்களில் இன்னமும் முதிர்ந்த உறவுகள் நாடி இரு தரப்பும் இணைந்து முயற்சிக்கக் குரல் கொடுப்போம். குழந்தை வளர்ப்பு, மனமொத்த பிரிவுக்கான வெளிகள் வரை பேசவும், பயணிக்கவும் எவ்வளவோ உண்டு.
– பூ.கொ.சரவணன்
====================================================================

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி