தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்?
தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்? (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14 ) இந்தியாவின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசிக்கிறார்கள். இது ஊரறிந்த இரகசியம். இந்த மக்களைப் பற்றி ஆழமாக அறிந்திராதவர்களுக்குக் கூட இது நன்கு தெரியும். எனினும் ஒரு திருப்திகரமான பதிலளிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்று இதனை எவருமே எடுத்துக் கொள்ளாததுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது; வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியே வாழும்படி எவ்வாறு நேர்ந்தது? அவர்கள் முதலில் தீண்டப்படாதவர்களாக அறிவிக்கப்பட்டு, பிறகு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்களா? கிராமத்திற்கு வெளியே வசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்களா? அல்லது ஆரம்பத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசித்து வருகிறார்களா? பின்னர்தான் தீண்டப்படாதவர்களாகப் பிரகடனம் செய்யப்பட்டார்களா? துவக்கத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசிக்கிறார்கள் என்பது இக்கேள்விகளுக்குப் பதிலாக இருக்குமா...