கொள்ளிடம்-நீரியல் தொழில்நுட்பத்தின் தந்தை!

கொள்ளிடம்-நீரியல் தொழில்நுட்பத்தின் தந்தை!

காவிரியும் கொள்ளிடமும் தனித்தனியே பிரிந்து செல்லும் மையப்புள்ளியான முக்கொம்பு, இயற்கை வரைந்த ஓவியங்களிலேயே தனி அழகைக்கொண்டது.

தமிழ் மக்களின் தொன்மையான நீர்ப்பாசன முறையை நன்கு அறிந்து அந்தநீர் அழகை, அன்றைய அறிவியல்பூர்வ கண்ணோட்டத்தில் வளர்த்தெடுத்தப் பெருமை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரான ஆர்தர் காட்டன் என்பவரையே சாரும்.
இவரது முதல் லட்சிய சாதனையான முக்கொம்பு தடுப்பணையை, நம்மால் இன்று பாதுகாத்து வைத்து கொள்ள முடியவில்லை. அது உடைந்து விழுந்த துயரம் நிகழ்ந்து விட்டது. ஆனாலும், காலத்தால் அழிக்க இயலாத ஆர்தர் காட்டனின் அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் இப்பொழுதாவது ஞாபகப்படுத்திப் பார்த்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
1829-ஆம் ஆண்டில்தான், காவிரி பாசனப் பகுதிக்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தனிப் பொறுப்பாளராக பணியில் சேர்ந்தார் ஆர்தர் காட்டன். காவிரி நீரின் பெரும் பகுதி, எந்தவித பயனும் இல்லாமல் கொள்ளிடத்தின் வழியாக கடலில் கலந்து கொண்டிருந்த காலம் அது. அவரது பொறியியல் மனம் அப்போதே அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு வலிமை வாய்ந்த காரணமும் இருக்கத்தான் செய்தது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையை ஒட்டி, பெரும் பஞ்சத்தில் இந்தியா சிக்கிக் கொண்ட மோசமான சூழல். 19 -ஆம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு கோடி மக்கள் பஞ்சத்தாலும், பஞ்சத்தால் ஏற்பட்ட கொள்ளை நோய்களாலும் மடிந்து போனார்கள். இதில் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அடங்குவர்.
ஒருபுறம் கிழக்கிந்திய கம்பெனியின் கொடுமையான வரி விதிப்பு, இயற்கை வளங்களை எல்லை மீறி எடுத்து செல்லுதல் போன்ற அடாவடிச் செயல்கள் இருந்த போதிலும், மறுபுறம் பொறியியல் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக சாவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவர்கள், உண்மையான மனித இயல்பில் நின்று, சிந்திக்கத் தொடங்கினார்கள். அந்த இளைஞர்களின் தலைமகன் என்று ஆர்தர் காட்டனை குறிப்பிட வேண்டும்.
பட்டினிச் சாவின் கொடுமை, ஆர்தர் காட்டனை பெரிதும் பாதித்தது.
 அதற்கான ஆக்கபூர்வமான செயல்கள் குறித்து அவரது மனம் சிந்திக்கத் தொடங்கியது. ஆறுகளின் வடிநிலப் பகுதிகளில் உலகில் குறிப்பிட்டு சொல்லதக்க பெருமையை பெற்றுள்ள காவிரி, ஒரு காலத்தில் மக்கள் பசியை போக்கும் அட்சய பாத்திரமாக இருந்தது. இதை, ஏன் மறுகட்டமைப்பு செய்து பயன்படுத்த கூடாது என்று சிந்திக்க தொடங்கினார் அவர்.
முதலில் காவிரியின் முக்கொம்பில்தான், அவரது பார்வை ஆழமாகப் பதிந்து நின்றது. வேகமெடுத்து ஓடி வரும் பெருநீர், இந்த இடத்தில்தான் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது. ஆனால், இந்த இயற்கைப் பிரிவுக்குக் காரணம், காவிரியைவிட கொள்ளிடம் ஆறடி பள்ளத்தில் ஓடுகிறது என்பதே ஆகும்.
வெள்ளம் ஏற்படும் காலங்களில் கூடுதல் வெள்ள நீரைக் கொண்டு சென்று கடலில் கலக்க வைத்து, விளைநிலங்களைப் பாதுகாப்பதில் கொள்ளிடம் பெரும் பங்காற்றுகிறது என்பது உண்மைதான்.
ஆனால் நீரற்ற காலத்தில், காவிரிக்கு கொடுக்காமல், கொள்ளிடம், தானே தண்ணீர் அனைத்தையும் எடுத்து சென்று கடலில் சேர்த்துவிடும் கெடுதலையும் செய்து கொண்டிருந்தது. இதைத் தடுக்க, முடிந்த வரை மக்கள் முயற்சி செய்து பார்த்தார்கள்.
கொள்ளிடம் ஓடு பாதையில் முளையடித்து, அதில் மரங்களை அடுக்கி, அதை மண் தடுப்பணையாகப் பயன்படுத்தி, காவிரிக்கு நீர் எடுத்துச் செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த அணைகள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்வதில்லை. அடிக்கடி வரும் வெள்ளத்தால் அவை மரணம் அடைந்து கொண்டே இருந்தன.
இந்தப் பின்னணியில்தான் காவிரி வடிநிலத்தில் ஆர்தர் காட்டனின் பயணம் தொடங்குகிறது. அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நீரியல் தொழில் நுட்பத்தின் அன்றைய உலக அதிசயம் ஒன்றைக் கண்டு கொள்கிறார் ஆர்தர் காட்டன்.
அது தான் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லணை.
 காவிரியின் ஆழம் காண முடியாத மணற்படுகையில் கல்லணை அமைந்திருப்பது, அவரை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
நீரும் மணலும் இணைந்து சுழல் அமைத்து நடத்தும் ஓட்டத்தில், எவ்வாறு அணையை அமைக்க முடியும் என்பதை, அவரது பொறியியல் அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நெடுநேர யோசனையில் ஈடுபட்ட அவருக்கு, திடீரென்று அதற்கான காரணம் புரிந்து விட்டது. ஒரு புதிய நீரியல் தொழில்நுட்ப ஞானத்தை அதிலிருந்து அவர் பெற்றுக் கொண்டார். ஓடும் நீரில் கட்டுமான அடித்தளம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கூட அதற்கு முன்பிருந்த தொழில்நுட்பம் பெற்றிருக்கவில்லை.
ஆர்தர் காட்டன், தனது ஆவணங்களில் மிகவும் நேர்மையோடு, கல்லணையை ஆய்வு செய்த பின்னர்தான், ஓடும் நீரில் பாலங்களும், அணைக்கட்டுகளும் கட்டும் தொழில் நுட்பத்தை உலகம் அறிந்து கொண்டது. மகத்தான இந்த தொழில்நுட்ப அறிவை நமக்கு வழங்கிய, அன்று வாழ்ந்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்லணையின் கட்டுமான நுட்பம் சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது. கூடுதல் எடையுள்ள கற்பாறைகளை முதலில் போட, அவை கொஞ்சம் கொஞ்சமாக மண்ணின் அடி ஆழத்திற்குச் செல்கின்றன.
அவற்றை மணல் ஓட்டம் மூடி அணைக்கு வலிமை சேர்க்கிறது. அந்த தொழில்நுட்பத்தை ஆர்தர் கார்டன் தெளிவாக அறிந்து கொண்டார். அதன் பின்னர், கல்லணையின் அடித்தளத்தையும் ஆராய்ந்த பின்னர் கிராண்ட் அணைக்கட்' என்ற பெயரையும் அதற்கு சூட்டினார்.
அதன் பின்னர்தான், அவரது காவிரி வடிநில சீரமைப்புப் பணி தொடங்குகிறது.
அந்த மாபெரும் லட்சியக் கனவு, முக்கொம்பிலிருந்துதான் ஆரம்பமானது. ஆர்தர் காட்டன் முக்கொம்பில் 45 கதவுகளை கொண்ட ஒரு அணையை கொள்ளிடத்தில் உருவாக்கினார். 1836 -ஆம் ஆண்டில் ஆந்த அணை திறக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில், உலக அளவில் முதல் பரிசோதனையாக அந்த அணையின் கட்டுமானம் கருதப்பட்டது. வெள்ளத் தடுப்பு மற்றும் பாசனத்திற்கு நீரை பயன்படுத்துதல் ஆகிய இரட்டைக் கொள்கையோடு அந்த அணை உருவாக்கப்பட்ட பின்னர்தான், காவிரி நீர்ப்பாசன முறையில் தீவிர மாறுதல்கள் ஏற்படுகின்றன.
 வயல்வெளிகள், விரிந்த அளவில் நீர் பாசன வசதியை பெறத் தொடங்கின.
ஆனாலும், அதில் வேறொரு பிரச்னை எழுந்தது. பெருவெள்ளம் வரும் காலங்களில் அதிகமாக வெளியேறும் கூடுதல் நீரை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது என்பதுதான் அந்தப் பிரச்னை. அதற்கென்று தனியாக ஒரு திட்டத்தை வகுத்தார் ஆர்தர் காட்டன்.
முக்கொம்பு அணை மேலணை' என்று கூறப்படுகிறது. மேலணை, கல்லணை ஆகியவை போல் மற்றொரு அணையும் இதற்கு தேவை என்பதை ஆர்தர் காட்டன் அறிந்துகொண்டார்.
கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் வெளியேறும் கூடுதல் நீரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் அணையாக அது இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
கொள்ளிடம் ஆற்றில் கும்பகோணத்திற்கு அருகில் இப்பொழுது அணைக்கரை' என்று அழைக்கப்படும் இடத்தில் கீழணையை கட்டினார். முக்கொம்பில் மேலணை திறந்ததற்கு நான்காண்டுகளுக்கு பின்னர், 1840-ஆம் ஆண்டில் கீழணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
சென்னை மாநகரம் உள்ளிட்ட பெரும் பகுதி நிலத்திற்கு நீரை வழங்கி வரும் வீராணம் ஏரிக்கான முக்கிய நீர் சேமிப்பு கீழணையிலிருந்துதான் இப்பொழுதும் கிடைக்கிறது.
இதைப் போலவே, மேட்டூர் அணை 1934 -இல் கட்டி முடிக்கப்பட்டது என்றாலும், அதற்கான அடிப்படையை, முதன் முதலில் அமைத்துக் கொடுத்தவர் ஆர்தர் காட்டன்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அவர், 1835-ஆம் ஆண்டில் மைசூர் சமஸ்தான மன்னரை சந்தித்து, இந்தத் திட்டத்தை முன் வைத்தார். ஆனால், அது மைசூர் அரசவையால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதைப் போலவே, வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் நவீன பாசனமுறைகளை வடிவமைத்துக் கொடுத்தவரும் ஆர்தர் காட்டன்தான்.
அதன் பின்னர் அவர் புகழ் இந்திய அளவில் பரவத் தொடங்கியது.
 தமிழகத்தைப் போலவே, ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா நதியிலும், தவளேஸ்வரத்தில் கோதாவரி நதியிலும் அணைகளைக் கட்டி ஆந்திராவையும் தமிழகத்தைப் போலவே நெல்விளையும் பூமியாக மாற்றினார்.
இங்கிலாந்து நாட்டில் 1803-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்து, தனது 15 -ஆவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் சாதாரண பணியில் சேர்ந்து, பின்னர் நீரியல் அறிஞர்களில் ஒருவராக சர் ஆர்தர் காட்டன் புகழ் பெற்றார் என்பது உண்மை தான். ஆனாலும், அதற்கான பயிற்சியை அவருக்கு அளித்து அவரை உலக புகழ் பெறச் செய்தது காவிரி வடிநிலம்தான் என்பது நமக்கு பெருமிதத்தைத் தருகிறது.
ஆனாலும், ஒரே ஒரு கேள்வி மட்டும் மனத்தில் எழுந்து கொண்டேயிருக்கிறது.
கல்லணையை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்து நின்றதில் மணல் அடுக்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்றவர் சர் ஆர்தர் காட்டன்.
ஆனால், அவர் கட்டிய முக்கொம்பு அணை உடைந்ததற்குக் காரணம், வரம்பு மீறி மணல் அள்ளப்பட்டதால்தானா? அது குறித்து விவாதிப்பதற்கு கூட இன்றைய அரசு பயப்படுகிறதே, அது ஏன்?
கட்டுரையாளர்:
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி