பெரியார் உழைப்பு

காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே! இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி! என் கதி எப்படியாகுமென்று நினைத்துப்பார்க்கவும் பயமாயிருக்கிறதே.
என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தது போலவே காலம் கழித்து வருகிறேன்.
எனவே இப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு உணர்ச்சி வராவிடில், பின்னர் எப்போதுதான் சமயம் வாய்க்குமென்று நினைக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான முறையில் என்னைத் தவிர வேறு யாராலும் இயக்கத்தை நடத்த முடியாது என்று கூறுவேன். நான் பெருமைக்காக கூறவில்லை. மற்றவர்களெல்லாம் பெரிய பெரிய அரசியல் மேதாவிகளாகவும், பிரபுக்களாகவும் இருக்கலாம். அரசியல் செல்வாக்கும் பெறலாம். அதில் நான் தகுதியற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் சமுதாயத் துறையிலே நம் மக்களுக்கு இருந்து வரும் அடிமைத்தனத்தை ஒழிக்க எங்கள் இயக்கம் அதாவது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் செய்து வரும் பொறுப்புடைய காரியத்தைப் போல வேறு எவரும் எக் கட்சியும் இந்நாட்டிலே செய்தது கிடையாது.
எனது தொண்டும், சுயமரியாதை திராவிடர் இயக்கங்களின் பெருமுயற்சியுமில்லாவிடில் இன்றைய நிலையில் பார்ப்பனர்கள் நம்மை நெற்றியிலே சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று இறுமாந்து கூறியிருப்பார்களே?
அது மட்டுமா, தாழ்த்தப்பட்ட சமுதாயம் சற்றாவது தலை நிமிர்ந்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் எனது தொண்டல்லவா? எங்கள் இயக்கத்தின் முயற்சியல்லவா?
இன்னும் கூறுவேன் 15- ஆண்டுகளுக்கு முன் உத்தியோகத்துறையில் நமது நிலை எப்படியிருந்தது? இன்று எப்படியிருக்கிறது? நீதிபதிகளிலே முன்பு நம்மவர்கள் இருக்க முடிந்ததா? இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே?
இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே? இம்முயற்சி யாரால் வந்தது? எங்களுடைய உழைப்பால் அல்லவா? வேறு யார் இந்த முயற்சிகளுக்குப் பாடுபட்டனர். கனம் ஆச்சாரியாரே கூறுவாரே, எங்களது தொண்டு இந்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்னீயத்தின் ஏக போக உரிமையை எவ்வளவு குறைத்திருக்கிறதென்று.! "
- திருச்சி பீமநகரில், 24.05.1949- அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி