இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய தலைவர் யார் ?. திருமாவேலன் ஆசிரியர்

ப.திருமாவேலன் ஆசிரியர். ஆனந்தவிகடன்

வினா:   "இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய  தலைவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?"

பதில்:   " நிச்சயமாக பெரியார்தான். வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே நாம் பெரியாரை அடையாளப்படுத்துகிறோம். அதையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறோம். பெரியார் பல்வேறு தளங்களில் இயங்கினார். அவற்றுள் இரண்டுதான் மேலேசொன்னவை. அவரை அவற்றுக்குள் அடக்குவதே தவறான கற்பிதம்.
பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு.ஒன்று சாதிஒழிப்பு, மற்றொன்று பெண்உரிமை. இவற்றிற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். சாதியைஎதிர்த்தார். அதை மதம் காப்பாற்றுகிறது என்றார்கள்; மதத்தை எதிர்த்தார்.மதம் தன் கொள்கைகளை வேதத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்றார்கள்;
வேதத்தை எதிர்த்தார்.அதுதான் சாத்திரம்
என்றார்கள்.  அந்த சாத்திரத்தை யார் உருவாக்கியது என்று கேட்டார்.
கடவுள் என்றார்கள்.
சாதியை உருவாக்குகிற, மக்களைப்
பிளவுபடுத்துகிற கடவுளும் இருக்க
 முடியுமா  என்றார். அப்போதுதான் அந்தக் கடவுளை எதிர்த்தார்.
பெரியாரின் கடவுள் மறுப்பை இப்படித்தான் நாம் நோக்க வேண்டும். இந்தப் படிநிலைகளையெல்லாம் விட்டுவிட்டு, அவர் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று விமர்சிப்பது மேம்போக்கானது.
‘Second Sex' என்ற புத்தகம்தான் இன்று உலகில் பெண்ணியத்திற்கான அறிக்கைபோல!அந்தப்புத்தகம் வருவதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பாகவே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்.
அவர் அன்று எதையெல்லாம் சொன்னாரோ அதுதான் இன்று நடக்கிறது. ஆண் பெண்
வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும் என்றார். பெண்கள் நீளமாகத்தான்
முடிவளர்க்க வேண்டுமா என்று கேட்டார்.   
யாரெல்லாம் பாப் கட்டிங் செய்கிறீர்களோ அவர்களுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன் என்றார்.பெண்களும் லுங்கிஅணியலாம் என்றார். அழகைவிட சவுகரியமே முக்கியம் என்றார். இன்று 'நைட்டி, மிடி' யெல்லாம் லுங்கியின் வடிவங்கள்தானே! நகைமாட்டும் ஸ்டேண்டாக இருக்காதீர்கள் என்றார். பிள்ளைகளை வளர்ப்பதிலேயே உங்கள் வாழ்க்கை செலவாகிறது அதனால் அதிகப்படியாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள் என்றார். இவை அனைத்துமே இன்று பேசப்படுகின்றன. தன் காலத்து சமூக விழுமியங்களோடு மட்டும் நின்றுவிடாமல் நூறாண்டு காலம் தாண்டிப்பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே !
அந்தப் பார்வைதான் பெரியார் என்றதலைவனின் அடையாளம்.
பெரியார் மீது கொள்கை ரீதியாகப்
பலருக்குப் பல்வேறு வேறுபாடுகளும்
விமர்சனங்களும் இருக்கின்றன.ஆனால்  அவற்றைத் தாண்டி...
-ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும், -ஒரு தத்துவத்தில் எவ்வாறு கடைசிவரை பிடிப்புடன் இருக்க வேண்டும், -அந்தத் தத்துவத்தை எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்,  -அந்தத் தத்துவத்தின் வெற்றிக்காக
 எவ்வாறு இறுதிவரை போராடவேண்டும், -அந்தத் தத்துவத்திற்கான இயக்கத்தை
 எவ்வாறு கட்டமைக்க வேண்டும், -அந்த அமைப்பிலுள்ள ஆட்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும், -கொள்கை ரீதியான எதிரிகளை  எவ்வாறு மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று பன்முக ஆளுமையும் தனிமனித ஒழுக்கமும் கொண்ட தலைவர் பெரியார்!
தமிழகத்தில் எல்லோராலும் பின்பற்ற ஏதுவான ஒரு தலைவராகவே நான் பெரியாரைப் பார்க்கிறேன்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி