*நெருக்கடியும் சேர்ந்தே வளர்கின்றது? -
*நெருக்கடியும் சேர்ந்தே வளர்கின்றது ?..
ஒரு மாதத்திற்கு முன், நான் பணிபுரியும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 27 வயது மதிப்புமிக்க திருமணமான ஆண் ஒருவர், தற்கொலை முயற்சியினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் முடிவடைந்துவிட்டன, நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கின்றான். அவருக்கு சிறுவயது முதலே திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், திரையுலகில் வாய்ப்பு தேடி அலைந்து, பின் திரையுலகில் கிடைத்த வேலைகளை செய்து வந்தார். 20 வயது முடியும்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக, தனது திரையுலக கனவை விட்டுவிட்டு, வாழ்வாதாரத்தை தேடும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் அவரது மனம், திரையுலக கனவிலேயே ஈடுபாடோடு இருக்க, இங்கு எந்த வேலையிலும் ஒரு பிடிப்பு இல்லாமல், மாறிக் கொண்டே இருந்தார். திருமணம் ஆன பின்புதான், எதார்த்த சூழ்நிலைகளை உணர்ந்து, குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக, நிரந்தரமாக ஒரே வேலையில் இருக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவர் SWIGGY டெலிவரி பாயாக வேலைக்கு சேர்ந்தார். SWIGGY புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நேரம். பணிபுரிந்தவர்கள் மிகக் குறைவு. உணவகங்களில் இருந்து, பயன்படுத்துபவர்கள் தேர்வு செய்த உணவுகளை அவர்களிடம் குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். வடசென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலில், குறித்த நேரத்தில் வேகமாய் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது, மிகவும் ஆபத்தான பயணமாகவே இருக்கும். its an occupational hazard.. குறித்த நேரத்தில் வேகமாய் உணவுகளை கொண்டுபோய் பயனாளிகளிடம் சேர்க்காவிட்டால் அவர்களின் வேலைத்திறன் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே அவர்கள் அந்த ஆபத்தை பார்க்காமல் வேகமாய் டெலிவரி செய்து கொண்டுதான் இருந்தார்கள். இருப்பினும் அவர்களுக்கு வேலையின் பொருட்டு நிரந்தரமற்ற தன்மை தான் இருந்தது. பணியாளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒரு டெலிவரி செய்தால் அவர்களுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு டெலிவரியின் நேரம், 15 முதல் 45 நிமிடங்கள் வரை எடுக்கும். நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உழைத்தால் ஆயிரம் ரூபாய் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தொடர்ந்து வண்டி ஓட்டும்போது உடலில் ஏற்படும் அழுத்தத்தையும் வடசென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலிலும் குறுகிய சாலைகளில் வண்டி ஓட்டும் போது ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். (Swiggy அதன் டெலிவரி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது- இதன் அம்சங்கள் விவாதத்திற்குரியதாகும்) ஆரம்பத்தில் வேலையில் இருந்த ஆட்கள் மிகக் குறைவு. அதனால் ஒவ்வொருவருக்கும் நிறைய டெலிவரி கிடைத்தது. நாளொன்றுக்கு ரூபாய் 1000 முதல் 1,200 வரை கிடைத்தது. இதை நம்பி தான் அவர்கள் வீட்டு பொருட்கள், வீட்டு வாடகை, குழந்தையின் பள்ளிப் படிப்பு போன்ற அனைத்தும் இருந்தன. swiggy வளர்ச்சி பெற பெற, வேகமாக டெலிவரி செய்யும் பொருட்டு , வேலையில் நிறைய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். நிறுவனத்திற்கு ஆர்டர்கள் பெருக ஆரம்பித்தன. ஆனால் தனி ஒவ்வொருவருக்கும் ஆர்டர் குறைய ஆரம்பித்தது. இவர்களுக்கு மாதம் கிடைக்கும் வருமானமும் குறைய ஆரம்பித்தது. 15 மணி நேரம் வரை வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சிறிது சிறிதாக பல நேரம் வேலையில்லாமல் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கு வருமானமும் குறைய ஆரம்பித்தது. ஆனால் நிர்வாகத்திற்கு லாபம் அதிகரிக்க ஆரம்பித்தது. இவருக்கும் வருமானம் குறைந்தால், வருமானத்தை நம்பி இருந்த குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட ஆரம்பித்தார். ஆர்டர்/ டெலிவரி இல்லாத நேரங்கள் அதிகமாகிக் கொண்டே போக, விரக்தியும் அதிகமாகிக்கொண்டே போயிருக்கிறது. மாதங்கள் ஓட, வேலையில் இன்னும் நிறைய பேர் சேர, சிரமமும் அதிகமாகிக்கொண்டே போனது. வேலையில்லா நேரத்தில் மனதில் பல யோசனைகள் ஓடத் தொடங்கின. குடும்ப பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாத சூழ்நிலை, பல மாதங்களாக உயிரைக் கொடுத்து வேலை செய்தும், நிரந்தரமில்லாத வருமான நிலை என பல யோசனைகள். விரக்தியின் உச்சத்தில் எடுத்த முடிவு, அவரை மருத்துவமனை கொண்டு சேர்த்தது.
ஒருபுறம், Swiggy யில் கூகுள் போன்ற பெருநிறுவனங்கள், பெரும் முதலீடு செய்யும் அளவுக்கு, swiggyயின் வளர்ச்சி இருந்தபோதிலும், அந்த வளர்ச்சிக்காக முக்கியமாக பாடுபட்ட, உணவுகளை வேகமாய் சரியான நேரத்திற்கு, தங்கள் உடல் நலத்தையும் உயிரையும் பொருட்படுத்தாமல் கொண்டு சேர்த்த, டெலிவரி பணியாளர்களுக்கு, அந்த வளர்ச்சி போய் சேரவில்லை. இதுதான் இன்றைய நவீன வளர்ச்சியின் கோரமுகம்.
ஒருபுறம் தற்கொலை முயற்சிகள் மிகவும் அதிகமாகி கொண்டிருப்பதற்கான காரணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். காரணம் கண்முன்னே தெரிந்தும், நேரடியாக இருந்தும், அதை பார்த்தும் பார்க்காதது போல், கண்ணை மூடிக்கொண்டு, தொலைந்த இடத்தை விட்டு , நிறைய ஆய்வுகளை செய்து, அதற்காக நிறைய பணத்தை விரயம் செய்து, எங்கோ தேடிக் கொண்டிருக்கிறோம். பிரச்சனை பிரச்சினையின் மூலத்தை சரி செய்யாமல், வேறு எதையோ, எதன் மூலமாகவோ சரிசெய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
Comments
Post a Comment