எம்.சி.ராஜா : மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை - இரா.வினோத்

எம்.சி.ராஜா : மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை
==================================================
-இரா.வினோத்
வரலாற்றில் ம‌றக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில், ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னிய தமிழக ஆளுமை.
தலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவில் நிலைக்கொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் சூடுபிடிக்காத நிலையில், நாடு தழுவிய‌ அளவில் தலித் அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர் எம்.சி.ராஜா. எனவே தான் அக்காலத்து ஆளுமைகளால் 'பெருந்தலைவர்' என மரியாதையோடு அழைக்கப்பட்டார்.
கல்வியின் மூலம் அதிகாரம்
எம்.சி.ராஜா (17.06.1883 – 20.08.1945) ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்பகால‌ நிர்வாகிகளுல் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டில் பிறந்தார். ராய‌ப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளியிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், பின் அதே இடங்களில் ஆசிரியராக பணியாற்றினார். எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி. ராஜா எழுதிய அளவை (Logic Text book) நூலே, கற்பிக்கும் முறை குறித்து தமிழில் வெளியான முன்னோடி நூலாக கருதப்படுகிறது.மாணவர்களுக்காக சிறுசிறு இலக்கண நூல்களையும், நீதிநூல்களையும் எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாளுடன் இணைந்து மழலையர் பாடல் நூலை, 'கிண்டர் கார்டன் ரூம்' ('Kinder Garden Room) என்ற தலைப்பில் வெளியிட்டார்.
தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை உணர்ந்த எம்.சி.ராஜா சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். கல்வியின் மூலமாக தலித்துகள் வாழ்வில் வளர்ச்சியை காண முடியும். அரசியல் அதிகாரத்தை பெற முடியும். எனவே எம்மக்களுக்கு இலவச கல்வியை கற்க அனுமதி தாருங்கள் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். 1917-ல் தொடக்க கல்வி கல்விக்குழு, 1919-ல் தொடக்கக் கல்வி மசோதாவிற்கான சட்ட வரைவு குழு, உயர்கல்வி மறுசீரமைப்புக்குழு, சென்னைப் பல்கலைக்கழக செனட் என பல குழுக்களில் பங்கேற்று கல்வி உரிமைக்காக போராடினார்.
ஆதி திராவிடர் அடையாளம்
1910-களில் அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கிய எம்.சி.ராஜா, அயோத்திதாசரின் ஆதிதிராவிட மகாஜன சபைக்கு புத்துயிரூட்டினார். 1916-ல் அதன் செயலாளராக பொறுப்பேற்று தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரு,பம்பாய், இலங்கை என பல இடங்களில் பரவிய கிளைகளின் செயல்திட்டத்தை வகுத்தளித்தார். 1917-ல் மாண்டேகுவையும், 1919-ல் செம்ஸ்போர்டையும் சந்தித்து ஒடுக்ககப்பட்டோருக்கான அரசியல் உரிமையைக் கோரி மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக 1919-ல் எம்.சி.ராஜா சென்னை மாகாணச் சட்டசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய தேசத்தின் சட்டசபைக்குள் நுழைந்த முதல் தலித் அரச பிரதிநிதி என தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டார்.
தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் தாய்மொழி கல்வி உரிமை, கல்வி கொள்கையில் நீதி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலமும் வேலையும்,சிறுபான்மையோர் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம் என சட்டசபையில் பல விவகாரங்களை எழுப்பினார். 1922-ல் ஆதி குடிகளான பறையர், பஞ்சமரை அதிகாரபூர்வமாக, 'ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர்' என குறிப்பிட வேண்டும் தீர்மானம் கொண்டு வந்தார். எம்.சி.ராஜா தந்த அடையாளத்தாலே இன்றும் பட்டியல் வகுப்பினர் இந்தியா முழுவதும் குறிப்பிடப்படுகின்றனர்.
முதல் தலித் தேசிய தலைவர்
1923-ல் சென்னை ஆளுநர் விலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை கோரினார். இதற்காக சென்னை மாகணம் மட்டுமல்லாமல் டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொது கூட்டங்களையும், 100-க்கும் மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார். இறுதியாக 1925-ல் இந்தியாவின் நாடாளுமன்றத்துக்குள் முதல் தலித் உறுப்பினராக நுழைந்தார்.
ஒடுக்கப்பட்டோருக்கான சமூக உரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் கோரிய எம்.சி.ராஜா 1927-ல் ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற வரலாற்று நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். வரலாற்றிலும் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஆழமான அறிவும், கள அனுபவமும் வெளிப்பட்ட இந்நூல் இந்திய சாதி சமூகத்தின் உண்மையான முகத்தை ஆட்சியாளருக்கு காட்டியது. 1928-ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பினை ஏற்படுத்திய எம்.சி.ராஜா லண்டனுக்கு போய், “இந்தியாவில் 130 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பின்னரும்கூட, தாழ்த்தப்பட்ட வர்களாகிய நாங்கள் அதே நிலையில் இன்னமும் இருக்கிறோம் என்ற உண்மை துரதிர்ஷ்ட வசமானது” என வாதிட்டார். அம்பேத்கருக்கு முன்பாகவே,அதுவும் தமிழகத்தை மையமாகக் கொண்ட எம்.சி.ராஜா, ஒட்டுமொத்த தேசத்தின் தலித் தலைவராக உருவெடுத்திருந்தார்.
காங்கிரஸ், நீதிகட்சி, தொழிற்சங்க செயல்பாடு என அன்றைய அரசியலில் நிகழ்ந்த அனைத்திலும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக எம்.சி.ராஜா ஒலித்தார். காங்கிரஸின் இந்து சனாதன மனநிலை, நீதிக்கட்சியின் தலித் விரோத போக்கு, புளியந்தோப்பு கலவரத்தில் தொழிற்சங்கத்துக்கு எதிர்ப்பு என எம்.சிராஜா தன் மக்களின் பக்கம் நின்றார்.
அவரது ஆழமான அறிவும், தீர்க்கமான செயலும், ஆங்கில பேச்சும் ஆட்சியாளர்களையும், மற்ற தலைவர்களையும் எம்.சி.ராஜா பக்கம் திருப்பியது. இதனால் சென்னை மாகாண நீதிபதி (1919), நாடாளுமன்ற‌ சபாநாயகர் (1934),சென்னை மாகாண வளர்ச்சித்துறை அமைச்சர் (1937) என பல பதவிகள் அவரைத் தேடி வந்தது.
அம்பேத்கருடன் இணைந்த எம்.சி. ராஜா
தன் வாழ்வின் முற்பகுதியிலே தேசிய தலைவராக கொண்டாடப்பட்ட எம்.சி.ராஜா பிற்பகுதியில் அக்கால சூழலுக்கு முரணான சில முடிவுகளை எடுத்தார். அதுவரை இந்திய அரசியலில் காணப்படாத அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமையின் வருகை தலித் தரப்பில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் எம்.சி.ராஜாவுக்கு 1930-ல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நழுவியதால், அம்பேத்கரிடம் முரண்பட்டார். இந்த கொள்கை முரணை அன்றைய காங்கிரஸாரும், ஊடகங்களும் பகையாக வளர்த்தெடுத்தன.
இதனால் பூனா ஒப்பந்தம், அம்பேத்கரின் இந்து மத துறப்பு அறிவிப்பு என சில விவகாரங்களில் வரலாறு எம்.சி.ராஜாவை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தியது. இத்தகைய முரண்கள் தலித் அரசியல் குழுக்களின் ஆரம்ப நாட்களில் இருந்தே தொடர்ந்ததை பார்க்க முடிகிறது. அம்பேத்கரின் நியாயமான போராட்ட‌த்தை உணர்ந்த விரைவாகவே உணர்ந்த‌ எம்.சி.ராஜா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பூனா ஒப்பந்த விவகாரத்தில் நானே என்னை மன்னிக்க முடியாத அளவுக்கு தவறு செய்துவிட்டேன் என வருந்திய எம்.சி.ராஜா, ''அம்பேத்கரே எங்கள் பிரதிநிதி’'என முழங்கினார்.
1942-ம் ஆண்டு பூனாவில் நடந்த‌ அம்பேத்கரின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்ற எம்.சி.ராஜா அவருடன் ம‌னம்விட்டுப்பேசினார். அதன் பின்னர் கிர்ப்ஸ் குழு, சீல் குழு ஆகியவற்றில் அம்பேத்க‌ருடன் இணைந்து செயல்பட்டார். ''தன் மக்களுக்கு தன்னுடைய‌ சொந்த முயற்சியினால் அரசியல் உரிமைப் பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தாலே எம்.சி.ராஜா அத்தகைய‌ முடிவை எடுத்தார். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை இரு பெரும் ஆளுமைகள் ஒரே மாதிரியாக அணுக முடியாது'' என தன் 'அறவுரை' இதழில் குறிப்பிடுகிறார் மறைந்த தலித் அறிஞர் அன்பு பொன்னோவியம்.
தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் ஆழ தடம்பதித்த எம்.சி.ராஜாவைப் பற்றி இங்கு, இன்னும் முழுமையான வரலாற்று நூல்கள் எழுதப்படவில்லை.அவரது சட்டமன்ற உரைகள், நாடாளுமன்ற உரைகள், மாநாட்டு தீர்மானங்கள், அறிக்கைகள், பங்களிப்புகள் என முழுமையாக தொகுக்கப்படவில்லை.இந்த அவல நிலையில் தலித் ஆய்வாளர் வே. அலெக்ஸ் கொணர்ந்த ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-1’ என்ற நூல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.
எம்.சி.ராஜாவை மறு கண்டுபிடிப்பு செய்து, நினைவுகூர்வதன் மூலம் தமிழகத்துக்கு மாற்று அரசியல் வரலாறு கிடைக்கக் கூடும்!
-இரா.வினோத்
இன்று எம்.சி.ராஜா பிறந்த‌ தினம்
நன்றி: தி இந்து (21.08.2017)

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி