தலை தப்பிய தமிழறிஞர்கள்..கர்நாடக தமிழர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது!

தலை தப்பிய தமிழறிஞர்கள்..கர்நாடக தமிழர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது !
'மூன்று ஜெலட்டின் குச்சிகள், கால் கிலோ வெடி மருந்தைவைத்து பெங்களூருவை முழுவதுமாக‌ அழிக்கவும் இந்தியாவில் இருந்து தனித் தமிழ்நாட்டை உருவாக்கவும் சதிசெய்தார்கள்’ என்று இரண்டு தமிழறிஞர்கள் மீது வழக்குப் போட்டு, அதை நம்பவைக்க முடியுமா? அரசாங்கமும் காவல் துறையும் நினைத்தால் எதையும் செய்யலாம். 

கர்நாடக காவல் துறை இரண்டு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட 15 அப்பாவி தமிழர்கள் மீது இப்படித்தான் ஒரு வழக்கைப் போட்டது. 11 ஆண்டுகளாக அவர்களை வாட்டி வதைத்த இந்த வழக்கில் அனைவரையும் விடுதலைசெய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
திருச்சி தந்தைப் பெரியார் கல்லூரி பேராசிரியராக இருந்த முனைவர் நெடுஞ்செழியன், தமிழகத்தில் உள்ள முக்கியமான தத்துவ, அரசியல் பேராசிரியர்களில் ஒருவர். பெங்களூரு குணா, மிக முக்கியமான சமூகவியல் ஆய்வாளர். இவர்களோடு சில தமிழ் உணர்வாளர்களும் சம்பந்தமே இல்லாமல் பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் சேர்த்து கைதுசெய்யப்பட்டனர். அதில் மூவர் மரணம், அவமானங்கள், அலைச்சல் என்று இந்த வழக்கில் வாழ்க்கையையே தொலைத்தவர்களின் பக்கங்களைப் புரட்டினால் கண்ணீர் மழை கொட்டும்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...

1991 காவிரி கலவரத்திலும் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது நடந்த கலவரத்திலும் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பல‌ தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தனர். கர்நாடகத்தில் தொடரும் வன்முறையை சகித்துகொள்ள முடியாமல், உணர்ச்சிவசப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் செய்த சிறு பிழைதான், இந்த பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கின் பிள்ளையார் சுழி.

2002-ம் ஆண்டு பெங்களூரு பானஸ்வாடி ரயில் நிலையத்துக்கு அருகே மூன்று ஜெலட்டின் குச்சிகள், கால் கிலோ கல் உடைக்கப் பயன்படும் வெடி மருந்தோடு அந்த இளைஞர்களைக் கைதுசெய்தது பிரேசர் டவுன் போலீஸ். 'பெங்களூரு நகரத்தை அழிக்கச் சதி, விதான சவுதாவை தகர்க்கச் சதி, கே.ஆர்.எஸ். அணையை உடைக்கச் சதி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைத் தனியாகப்‌ பிரித்து பெங்களூரு, திருப்பதி, இலங்கை என பல இடங்களை இணைத்து தனி தமிழ்நாடு உருவாக்க சதி’ என பல சதிகளை இந்த வழக்கோடு சம்பந்தப்படுத்தினர். பல்வேறு அரசியல் பிரச்னைகள், இனவாத சிக்கல்கள், நீதித் துறை பிரச்னைகள் என்று எல்லாவற்றையும் தாண்டி முடிவை எட்டியிருக்கிறது அந்த வழக்கு.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவே இந்த வழக்கையும் விசாரித்தார். கடந்த 30-ம் தேதி வழக்கில் தீர்ப்பு. மாலை 5 மணிக்கு கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தவர், கடைசி வரிசையில் நின்றிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் உற்றுப் பார்த்தார். 'அனைவரையும் விடுதலை செய்கிறேன்’ என ஒரே வார்த்தையில் நீதி வழங்கினார்.
வழக்கில் இருந்து விடுதலையான பேராசிரியர் நெடுஞ்செழியனின் முகத்தில் அப்படியரு மகிழ்ச்சி. ''காவல் துறையால் திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்குக்காக‌ 32 மாதங்கள் சிறை தண்டனை, 15 லட்ச ரூபாய் செலவு, தேவை இல்லாத அலைச்சல் என அனுபவித்த கொடுமைகள் ஏராளம். நான் சிறையில் இருந்த காலத்தை எனது ஆய்வுக்காகப் பயன்படுத்திக்கொண்டேன். எங்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகக் காவல் துறை, சாட்சிகளாக‌ ஏற்பாடு செய்திருந்த கன்னட அமைப்பின் தோழர்கள் அனைவரும் உண்மையைச் சொன்னார்கள். இதுதான் வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்களுக்கு என் நன்றி. இது நீதிக்குக் கிடைத்த வெற்றி'' என்றார்.

எழுத்தாளர் குணா, ''தமிழ்ப் பற்றாளர் என்ற ஒரே காரணத்துக்காக நாங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டோம். சிறையில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தோம். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி'' என்று கண்கலங்கினார்.

தாமதமானாலும் நீதி வென்றுள்ளது. தொலைந்து போன இவர்களது வாழ்க்கையை யாரால் திருப்பித்தர முடியும்?

- இரா.வினோத்
படங்கள்:ந.வசந்தகுமார்
நன்றி:ஜூ.வி.5.6.2013


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி