எங்கே செல்கிறது இந்தியா? - சு.குமணராஜன்

எங்கே செல்கிறது இந்தியா? 

( இந்த கட்டுரையை எழுதியவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ் மனதுடன் வரும்  தமிழ் இலெமூரியா மாத இதழின்  முதன்மை ஆசிரியர் அய்யா சு.குமணராஜன் அவர்கள் . )
18 ச ம உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்து இன்று இந்த அபாரமான தீர்ப்பை வழங்க நீதி மன்றம் 9 மாதங்கள் எடுத்துக் கொண்டது. விசாரணை அனைத்தும் முடிந்த பின்னர் தீர்ப்பை எழுத எடுத்துக் கொண்ட நேரம் ஆறு மாதங்கள். இறுதியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சொல்லியிருக்கும் கருத்து சபாநாயகரின் ஆணை தவறு அல்லது சரி எனபதல்ல. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட விரும்பாததால் அவர் ஆணை செல்லுபடியாகும் என்பதே!
மற்றொரு நீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு சரத்துகளை எடுத்துக் காட்டி சபாநாயகர் அரசமைப்பு விதிகளை மீறியிருப்பதால் ச ம உறுப்பினர்களின் பதவி நீக்க ஆணை தவறு என்பதாகும். சட்டத்தை ஆய்வு செய்து எது சரி என்று சொல்வதில் உயர்நீதி மன்ற நீதிபதிகளிடையே இவ்வளவு பெரிய வேறுபாடு இருக்குமானால் சாதாரணக் குடிமக்கள் சட்டத்தை எவ்வாறு புரிந்து கொள்வர்?
இது தான் இந்திய நீதி மன்றங்களின் வழிகாட்டுதலா?
தீர்ப்பு எதுவாயினும் தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் 18 தொகுதி மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. இது எந்த வகையான அரசியல் நீதி? தேர்தல் அறிவிக்கக் கூடாது, பெரும்பான்மை வாக்கெடுப்பம் நடத்தக்கூடாது என்பதும் முந்தைய தீர்ப்பு. அது தற்போது தொடர்கின்றது. காலியாக உள்ள இடங்களுக்கு 6 மாத காலத்திற்குள் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என அரசமைப்பு வழிகாட்டுதல்கள் படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைய விதி என்னவாயிற்று?
நெருக்கடி நிலை தவிர இவ்விதிகள் மீறப்படக் கூடாது என்கிற நிலையில் தமிழ் நாடு அரசுக்கு உயர்நீதி மன்றமும் முட்டுக் கொடுப்பதை மக்கள் எவ்வாறு புரிந்து கொள்வர்? அதுவும் பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவு பெறாத ஓர் அரசு தொடர வழி வகிப்பது எவ்வகையான அரசியல் நீதி?
இனி மூன்றாவது நீதிபதி, விசாரணை, தீர்ப்பு ஒத்தி வைப்பு என ஓராண்டு கூட ஆகலாம். இவையனைத்தும் இந்திய அரசமைப்பு கருப்பொருளுக்கு முரணானதல்லவா? இது தான் இன்றைய அரசுகளின் ஆளுமைக்கு எடுத்துப் காட்டுகளா? நடுவணரசு விரும்பும் வரை அரசு தொடரும்; வழக்குகள் தொடரும்.
இதுதான் தமிழ் நாட்டு மக்களுக்கு இன்று கிடைத்திருக்கும் செய்தி!
நமது நீதி மன்றங்களில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகள் 3 கோடியே 20 இலக்கம். அவைகளைத் தற்போதைய கட்டமைப்பில் வேறு புதிய வழக்குகளைச் சேர்க்காமல் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமானால் 360 ஆண்டுகள் ஆகுமாம். இது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தரும் தகவல். இந்திய நீதித் துறையில் நிலுவையில் இருக்கும் வழ்க்குகளில் 50 விழுக்காடு அரசு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலானவை. 1947 ஆம் ஆண்டு தொடர்ந்த ஒரு வழக்குக்கு 2007 ஆண்டு இறுதியில் தீர்ப்பு வழங்கி சாதனை பிரிந்தது நம்ம இந்தியாவில் மட்டும் தான்!
நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு ஏற்பட்டு வரும் அவநம்பிக்கை இன்னும் ஆழமாக வேறூன்றுகிறது.
வாழ்க இந்திய சனநாயகம்! பண நாயகம்! பதவி நாயகம்!
கண்களை மூடி, காதுகளைப் பொத்திக்கொண்டு, வாயைத் திறவாமல் வாழ்க! வாழ்க! வாழ்க!

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி