தீரன் : அதிகாரம் என்பது ஒன்றல்ல ! - நெல்சன் சேவியர்

திரைப்பட விமர்சனம்
தீரன் : அதிகாரம் என்பது ஒன்றல்ல ! - நெல்சன் சேவியர்
*** *** ***
ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகனுக்கு வழங்குகிறது என்பதை விட முக்கியமானது படம் முடிந்து வீட்டுக்கு போகிறவனுக்கு, அது மூளையிலும் மனதிலும் என்னவாக பதிவாகிறது என்பதும் உள்ளுக்குள் எதை கடத்துகிறது என்பதும்தான்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு குடும்பங்களை சிதைத்த வடநாட்டு கொள்ளையர்களை தமிழக போலீஸ் வேட்டையாடுகிற கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று !
நிற்க !
ஒரு குற்றவாளியை கைது செய்ய வந்திருக்கிறோம், விசாரணைக்கு வந்திருக்கிறோம் என்கிற பெயரில் தர்மபுரியில் விழுப்புரத்தில் சத்தியமங்கலம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எல்லாம் கடுமையாக கண்டித்து விட்டு,
ராஜஸ்தானில் அதே மாதிரியான தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் கிராமத்தில் தமிழக போலீசார் அரங்கேற்றுகிற வன்முறையை பார்த்து ரசித்துக் கொண்டே, கொல்லுங்க என தியேட்டரில் கத்துகிற இந்த எண்ணத்தை நமக்கு விதைத்து எது ?
வில்லன் - தமிழனைக் கொன்ற வடமாநிலத்தான், இரக்கமில்லாதவன், அவனை தமிழன் பழி தீர்க்கிறான் என்கிற அடிப்படையில் பல்லுக்கு பல் - கண்ணுக்கு கண் என்கிற நம்முடைய ஆழ்மன வன்முறை பசிக்கு தீனி போட்டிருக்கிற வகையில் புத்திசாலித்தனமாக இயக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம்.
“ஏங்க போலீசை ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிற வன்முறை கிராமத்தில் என்ன செய்ய முடியும் ?”
அரசாங்கம் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியாது ஏனெனில் அந்த கிராமத்தில் இதற்கு முன் சாலைகள் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் மின்சாரம் குடிநீர் என எதற்காகவும் அரசாங்கங்கள் உள்ளே நுழையவேயில்லை என்பதையே காட்சிகள் காட்டுகின்றன.
ஓர் அரசாங்கம் எதையும் செய்யாமல் வாழத் தகுதியற்றவர்களாகவே ஒரு பிரிவினரை வைத்துக்கொண்டு, அவர்களை அந்த காரணம் சொல்லியே விரட்டி விரட்டி அடிப்பது இந்தியா முழுக்க நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை அவர்களுக்கு எதிரான ஒன்றாகவே திரையில் கொண்டுவந்து நிறுத்துவது என்ன மாதிரியான மனநிலை ?
அவர்களுக்கு நாகரிகமில்லை, காட்டுமிராண்டிகள், வன்முறை குணம் கொண்டவர்கள், பொது சமூகத்தோடு கலக்க முடியாதவர்கள் என பிரிட்டிஷ் ஆட்சி பார்த்த அதே பார்வையோடு, எழுபதாண்டுகள் கழித்து இந்திய பழங்குடியினரை இந்திய அரசும் நடத்துகிறது என்பதையே இது திரும்ப திரும்ப நினைவுபடுத்துகிறது. சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசாவில் ஏதாவது ஒரு பழங்குடியினர் கிராமத்தையாவது நேரில் பார்த்திருக்கிறீர்களா ?
வெறும் எட்டு பேர் கொள்ளையடிக்கிற ஒரு தனி கூட்டத்தின் கொள்ளைக்காக ஏன் ஒரு கிராமமே திரண்டு வருகிறது ?
“ உங்கள் புத்திசாலித்தனம் எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கிறது” என்கிற வில்லனின் முதல் வசனத்தை ஏன் எந்த கவலையுமில்லாமல் எளிதாக கடந்து போகிறோம் ? உண்மையில் மொத்த கதையுமே அந்த வரிகளில்தான் இருக்கிறது.
ஒரு அரசாங்கத்தின் வலிமையைவிட ஒரு படிப்பறிவில்லாத அதிகாரமில்லாத கிராமத்தின் வலிமை பெரிதா !
அவர்களுக்கு படிப்பறிவில்லை என்றால் ஏன் இல்லை என்பதே கேட்க வேண்டிய கேள்வி !
அவர்களுக்கு வேலையில்லை என்றால் ஏன் அங்கு வாழ்வதற்கு எதுவுமே இல்லை என்பதே கேட்க வேண்டிய கேள்வி ! வன்முறையாளர்களாக இருக்கிறார்களென்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக வன்முறையாளர்களாகவே இருக்கிறார்கள் என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி ! ஏனெனில் இதைப்பற்றியெல்லாமல் கவலைப்படாமல் அவர்களை துரத்தி துரத்தி வேட்டையாட, இது வெளியிலிருந்து வந்து நம்மை ஆட்சி செய்யும் பிரிட்டிஷ் ஆட்சியில்லை. நமக்கு நாமே தேர்ந்தெடுத்த சுதந்திரமான ஜனநாயக இந்திய அரசு !
காவல்துறையினரின் உண்மையான பக்கத்தை காட்டியிருப்பதாக சொல்கிறார்கள். எது உண்மையான பக்கம் ?
பெருமாள் பிச்சையை வேட்டையாடிய ஆறுச்சாமிக்கும் தீரனுக்கும் என்ன வித்தியாசம்?
சிவில் சமூகத்திடம் இருக்கும் வன்முறை குணம் அவர்களிடமிருந்து வந்த, அவர்களை காக்கும் காவல்துறைக்கும் இருக்குமென்றால் அதெப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும் ?
இந்த படத்தை பார்த்து முடிக்கிற ஒரு அரசியல் தெரியாத பார்வையாளனுக்கு இது எதையெல்லாம் கடத்துகிறது !
1) தமிழக காவல்துறை நடத்துகிற என்கவுண்டர்களுக்கு பின்னால் வலுவான ஒரு மக்கள் நல காரணம் இருக்கிறது என்பது மீண்டும் நம்பவைக்கப்பட்டருக்கிறது.
2) வடமாநிலங்களிருந்து வந்து வேலை பார்க்கிறவர்ளை ஏற்கனவே குற்றவாளிகளாக பார்க்கிற பார்வையை பெருமளவில் விரிவுபடுத்தியிருக்கிறது.
3) தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்கள் வன்முறை குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என அழுத்தம் திருத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.
4) மனித உரிமை ஆணையத்தை இன்னும் எத்தனை நாளைக்கு காமெடி பீசாக காட்டப் போகிறார்கள்? அதன் அதிகார வரம்புகள் என்ன? அவர்களால் என்ன செய்ய முடியும் ? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? எத்தனை ஆயிரம் பேருக்கான நீதி கிடைத்திருக்கிறது ? மனித உரிமை மீறல் பற்றிய சம்பவங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என ஏதாவது படித்திருக்கிறோமா? ஏதாவது நடந்தா மனித உரிமைன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க என எல்லா திரைப்படங்களிலும் கேலி செய்ய எப்படி நமக்கு தோன்றுகிறது?
மனித உரிமை ஆணையத்தை திரும்ப திரும்ப கேலி செய்வதென்பது எளிய மனிதர்களின் குரல் அல்ல. அது அதிகாரத்தின் குரல். மனித உரிமை என்ற ஒன்று தேவையேயில்லை என்னும் அரக்கத்தனத்தின் குரல்.
மக்கள் மனங்களில் ஆழப்பதிந்த சக்தி வாய்ந்த வடநாட்டு வில்லன், சட்டத்தை பற்றி கவலைப்பட தேவையில்லாத நேரடியாக பாதிப்புக்குள்ளான தமிழ் கதாநாயகன், வில்லனை எப்போது கொல்வார்கள் என காக்க வைக்கிற நேர்த்தியான திரைக்கதை என நிச்சயம் இது ஒரு ப்ளாக்பஸ்டர் மூவி.
எதைப்பார்த்து நாம் உண்மையில் பதைபதைத்திருக்க வேண்டுமோ அதையே ஆற அமர ரசித்து பார்க்க வைத்த வகையில், ஒரு பிரச்சனையை தான் பார்த்த கோணத்திலேயே மொத்த மக்கள் திரளையும் கூட்டிச் சென்ற விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் வினோத்.
மேலே சொன்ன எவற்றிலும் உங்களுக்கு உடன்பாடில்லையா ? ஒரே கேள்வி
உதாரணத்திற்கு சொல்கிறேன். நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தை ஆந்திர போலீசாக காட்டி, செம்மரம் வெட்டப் போன தமிழர்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேர்த்தியான திரைக்கதை அமைத்து, திருவண்ணாமலை அருகே ஒரு பழங்குடியினர் கிராமத்தில் தமிழ் வில்லனை கைது செய்ய ஆந்திர போலீசார் வந்திருப்பதாக படம் எடுத்திருந்தால் எத்தனை பேர் அந்தப் படத்தை கொண்டாடி இருப்போம் ?
எனக்கு அப்படிதான் இருந்தது !

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி