காலாக்களுக்கு அழிவில்லை - ஆய்வாளர் -ஸ்டாலின் ராஜாங்கம்

காலாக்களுக்கு அழிவில்லை - ஆய்வாளர் -ஸ்டாலின் ராஜாங்கம்
றப்புக் கட்டுரை: 


ஆணவம் கொண்ட மாபலி என்ற அரசன் விஷ்ணுவால் கொல்லப்பட்ட கதையை நினைவுபடுத்தும் பொருட்டே கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை இன்றும் கொண்டாடப்படுகிறது. இப்புனைவை வரலாறு என்று நம்பியே விழா நடத்துகிறார்கள். இவ்வாறுதான் இங்கு நிலவும் எல்லாக் கதையாடல்களும் வரலாறாகக் கருதப்படுகின்றன. எனவே கதையாடலை மாற்றி எழுதுவது வரலாற்றை மாற்றி எழுதும் பணியாகிவிடுகிறது. தமிழகத்தின் முன்னோடி தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) மாபலியின் மேற்கண்ட கதைக்கு மாற்றுக் கதையாடலொன்றை 1907ஆம் ஆண்டு எழுதினார். அவர் காட்டும் கதையாடலில் மாபலி ஒரு பௌத்த அரசன். மாபலிபுரம் என்ற ஊரை ஆண்ட அவன் பௌத்த சங்கத்தில் சேர்ந்து அறம் செய்து புரட்டாசி மாத அமாவாசையில் மரணமடைந்தான். தொடர்ந்து அந்நாளையே மக்கள் மாபலி அமாவாசி என்று நினைவெடுத்து வந்தார்கள். அதன் செல்வாக்கைக் கண்ட விஷ்ணு மதத்தார் பிற்காலத்தில் மாபலியைத் தங்கள் கடவுள் மிதித்துக் கொன்றார் என்ற கதையாக்கி அதையே உண்மைபோல் நிலவச் செய்துவிட்டார்கள் என்றெழுதினார்.
ஒரு கதைக்குப் பல்வேறு மாற்று வடிவங்கள் இருப்பதும் ஒரு கதையால் பாதிக்கப்படும் குழு அதற்கு மாற்றான கதையை உருவாக்கிக்கொள்வதும் நம் மரபிலேயே இருந்துவரும் போக்குதான். உற்றுப் பார்த்தால் வரலாறு என்பதே கதையாடல்களுக்கிடையே போராட்டமாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் தலித்துகள் உள்ளிட்ட விளிம்பு நிலையினரின் கதையாடல்களை விவரிக்கும் பா.ரஞ்சித்தின் காலா என்ற அண்மைய திரைப்படமும் மாற்றுக் கதையாடலாகவே வெளியாகியுள்ளது. சமகாலப் பிரச்சினையை தொன்மக் கதையோடு இணைப்பது போல் இல்லாமல் தொன்மக் கதையைச் சமகாலப் பிரச்சினையை நிறுவும் கதையாடலாக இணைக்கிறது காலா.
ஆசியாவின் இரண்டாவது பெரிய சேரியான மும்பை தாராவிதான் காலாவின் கதைக்களம். பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தாராவியை மும்பையின் அரசியல்வாதி மற்றும் தேசியவாதி ஹரிராம் என்பவர் அபகரிக்க முயற்சிக்கிறார். தமிழ் நாட்டின் திருநெல்வேலியிலிருந்து அங்கு சென்று வாழும் கரிகாலன் என்ற காலா அதற்கு எதிராக நடத்தும் போராட்டம்தான் படம். தமிழ் சினிமாவில் நிலவிவரும் நாயகன் - வில்லன் என்ற சட்டகத்தைக் கொண்டதுதான் இப்படம். ஆனால் அது வழக்கமான அர்த்தத்தில் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
மாற்றுக் கதையாடல்
மும்பையைச் சுத்தமாக்குகிறேன் என்ற பெயரில் ஹரிராம் தாராவிக்குள் நுழைய முயற்சிக்கிறான். நுழையவிடாமல் தடுத்து நிற்கிறான் காலா. இம்மோதலை ராமாயணத்தின் ராமன் - ராவணன் மோதலாக விவரிக்கிறது கதையாடல். வெள்ளையுடை அணிந்த நவீன அரசியல்வாதி தாராவியிலிருக்கும் கறுப்பு உடை அணிந்த காலாவை, அவன் பிரதிபலிக்கும் தாராவியை அழுக்காகவும் அகற்ற வேண்டியதாகவும் பார்க்கிறான். தூய்மை, வெள்ளை போன்றவை நிறங்களல்ல. அவை கருத்தாக்கங்கள். புராண ரீதியாக ராமனோடு இணைவுகொள்கிறது. இப்போதோ தூய்மை இந்தியாவைப் பேசும் பாஜக அரசு என்ற நவீன தேசியத்திற்குக் கறுப்பு நிறம் ராவணன் ஆகிறது. ராமன், ராவணனை அழித்ததைப் போல் வெள்ளை சுத்தம் என்ற பெயரில் நவீன தேசியம் கறுப்பு என்ற அழுக்கை அகற்ற விரும்புகிறது. இன்றைய நவீன அரசுகளின் தூய்மை தேசம் என்ற சமகாலத் திட்டங்களின் விளைவை, கார்ப்பரேட்மயமாகும் பின்னணியில் பெருநகரங்களின் சேரி வாழ்விடங்கள் சந்திக்கும் பிரச்சினையை இவ்வாறு ஒருசேர விவரிக்கிறது படம்.
கறுப்பு - வெள்ளை என்று எதிர்மறையாக அமையும் வண்ணங்களின் குறியீடு படம் முழுவதும் இந்த அர்த்தத்தில் கதையாடலை நகர்த்திச் செல்கிறது.
காலா என்றால் கறுப்பு; சண்டை செய்து காக்கிறவன் என்கிறான் காலா. அப்பெயரைச் சொல்லவே நாக்கு கூசுகிறது என்று சொல்லும் ஹரிராம் சேரிகளையே கறுப்பின், அழுக்கின் குறியீடு என்கிறான். அழுக்கை நீக்க வேண்டும் எனும்போது அதைக் காக்கும் காலாவையும் அழிக்க வேண்டும் என்றே அர்த்தம் தருகிறான். ஆனால், காலாவோ கறுப்பை அழுக்கு என்று கூறாமல் வண்ணம் என்கிறான்.
யாராக இருந்தாலும் தன் காலைத் தொட வேண்டும் என்பது ஹரிராமின் விருப்பம். ஆனால் காலாவோ காலில் விழக் கூடாது என்கிறான். தன்னுடைய கரிகாலன் என்ற பெயரை தமிழ்ப் பெயர் என்கிறான் காலா. ஜெய் மராத்தி என்று முழங்குகிறான் ஹரிராம். இவ்வாறான தொடர் சரடில் ராமாயணக் கதையை இணைப்பதின் மூலம் இந்தப் பூசல் வரலாற்றின் தொடர்ச்சி என்கிறது கதையாடல்.
இதைத்தான் மாற்றுக் கதையாடல் என்கிறோம். சமகாலப் பிரச்சினையொன்றைப் பிரச்சினையாக மட்டும் விவரிக்காமல் விரிந்த பின்னணியில் ஏற்கனவே மரபு ரீதியாக மக்கள் நினைவில் புதைந்து கிடக்கும் கதையாடலிலும் பொருத்துகிறது படம். வெகுஜன நினைவைப் பாதிக்கும் ஆற்றல் கொண்ட ஓர் ஊடகத்தில் இவ்வாறுதான் மாற்றுக் கதையாடல் ஒன்று உயிர் பெறுகிறது.
பேசப்படாதோர் வாழ்வைப் பேசும் ரஞ்சித்
தமிழ்த் திரைப்படங்களில் பேசப்படாத நகர்ப்புறத்து விளிம்பு நிலையினர் வாழ்வியலை பா.ரஞ்சித் தான் எடுத்த நான்கு படங்களிலும் (அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா) வணிக சினிமாவின் சட்டகத்திற்குட்பட்டு பேசி வந்திருக்கிறார். அவற்றைத் திரைப்படத்திற்கான தகவல்களாகவோ, பின்னணியாகவோ நிறுத்திவிடாமல் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் கதையாடல் வரிசைக்குள் சேர்க்கிறார். இந்த மாற்றுக் கதையாடல் என்பது நடைமுறைகளில், வண்ணங்களில், பேச்சில் என எல்லாவற்றிலும் நிகழ்த்தப்படுகிறது. கானா பாடல், மாட்டுக்கறி, கால் பந்தாட்டம், கபடி என்று களைகட்டுகிறது சேரி. விளிம்பு நிலை வாழ்வின் கொண்டாட்டங்களை முன்னெடுக்கிறது. எங்க ஊரு மெட்ராசு அதுக்கு நாங்கதான் அட்ரசு, கோட் சூட் போடுவது, கால்மேல் கால் இடுதல், இழிவாகவோ நகைச்சுவையாகவோ குறிப்பிடப்பட்டுவரும் கபாலி என்ற பெயரை நாயகனின் பெயராக்குதல் என்று புதிய அர்த்தங்களை முன்வைக்கின்றன.
காலாவில் மும்பை நகர விளிம்பு நிலையினரின் நிலவுரிமையை கவனப்படுத்தியிருக்கிறார். அது மும்பையின் பிரச்சினை மட்டுமில்லை. இந்தியப் பெருநகரங்கள் யாவற்றின் பிரச்சினையாகவும் இருக்கிறது. இதுவரையினும் நிலவுரிமை என்பது கிராமப்புற விவசாய நிலம் சம்பந்தப்பட்டதாக அறியப்பட்டு வருகிறது. மற்றபடி நகரங்களில் வாழ்வோருக்கு அது தன்னுடைய வாழ்விடம் என்ற நினைவு இருப்பதில்லை. அதனால்தான் வெளியேற்றும்போது எளிய புலம்பலோடு வெளியேறுகிறார்கள். இந்நிலையில்தான் அந்த வாழ்விடம் என்பது அவனுடைய நிலம்; அவனுடைய உரிமை என்கிற கோரலை காலா முன்வைத்திருக்கிறது.
வரலாற்றின் தொடர்ச்சியாக வரும் ராவணன்
மரபான ராமாயணக் கதையாடலில் ராவணன் வீழ்கிறான். ராமன் வெல்கிறான். அக்கதையாடலைக் காலாவுக்குள் கொணரும்போது ராவணன் வீழ்வதில்லை. மாறாக ராவணனை வீழ்த்த முடியாமல் ராமன் ஏமாந்து நிற்கிறான். நாயகன் ஜெயிக்க வேண்டும் என்னும் வெகுஜன சினிமாவின் சட்டகம்போல் இது தெரிந்தாலும் இது அதுவல்ல என்பது முக்கியமானது. ஹரியின் வீட்டில் ராவண வதம் பற்றிய ராமாயணப் பிரசங்கம் நடக்கும் பின்னணியில் அவன் ஆட்கள் சேரியில் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். மக்களைத் தாக்குகிறார்கள். இறுதியில் காலாவைக் கொன்றுவிட்டதாகக் கருதித் திரும்புகிறார்கள்.
இதுவரையிலும் சினிமா மொழியில் கதையாடல் நிகழ்கிறது. ராவணன் இறக்க வேண்டும். இறந்தவன் பிறக்கக் கூடாது என்பது மரபான கதையாடலின் விதி. ராவணனை நாயகனாகப் பார்க்கக் கோரும் அரசியல் கதையாடல் தமிழில் உண்டு. 19ஆம் நூற்றாண்டு சைவ மீட்பில் தொடங்கிய அதனை இருபதாம் நூற்றாண்டு பகுத்தறிவுவாத திராவிடம் மறு ஆக்கமாக்கிக் கொண்டது. புலவர் குழந்தை என்ற திராவிட இயக்க எழுத்தாளர் ராவணனை நேர்மறைப் பாத்திரமாக்கி இராவண காவியம் (1946) எழுதினார். இப்படத்தில் காலாவின் வாசிப்பு மேஜையிலும் அந்நூல் இருக்கிறது. அவரைப் பற்றி ‘ஒத்த தல ராவணன்’ என்ற பாடலும் ஒலிக்கிறது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியிலிருந்துதான் ராவணன் என்னும் பாத்திரம் இத்திரைப் பிரதியை வந்தடைந்திருக்கிறது. இப்போது ராவணன் இந்தக் கதையாடலில் என்னவாகிறான் என்பது கவனம்பெறுகிறது. மேற்கண்ட திராவிடக் கதையாடலை காலா முற்றிலும் ஏற்கிறதா வேறுபடுகிறதா என்று பார்ப்பதில்தான் இக்கதையாடலின் தனித்துவம் புரிகிறது.
புலவர் குழந்தை ராவணனை நேர்மறையான பாத்திரமாகக் காட்டினாலும் அதிலும் அவன் கொல்லப்படுகிறான். தோல்வி அடைகிறான். மரபான இரணியன் கதைக்கு மாற்றாக பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் (1934) நாடகத்திலும் இரணியன் கொல்லப்படுகிறான். இவ்விடத்தில் அந்தப் படைப்பாளிகள் படைப்பிற்கு இருக்கும் சாத்தியத்தை நம்புவதைவிடவும் வரலாற்றை நம்புகிறவர்களாக இருந்திருக்கிறார்கள். அங்கிருந்தது அரசியல் மட்டுமே. ஆனால், ரஞ்சித்தின் கதையாடலில் கற்பனையின் சாத்தியத்தைப் பெற்று ராவணன் சாகடிக்கப்படாமல் ஜெயிக்கிறான். மரபான ராமாயணத்திற்கு மாற்றாகத் தலைகீழாக மாற்றுக் கதையாடல் ஒன்று காலாவில் எழுவதைப் பார்க்கிறோம். இந்த விதத்தில் மரபான ராமாயணத்தின் முடிவிலிருந்து விலகியதோடு திராவிட இயக்கக் கதையாடல்கள் விட்டதையும் நிறைவு செய்து முன்நகர்கிறது காலா என்னும் இத்திரைப் பிரதி. மாபலி அரசன் கதையை எழுதிய அயோத்திதாசர் ஏற்கெனவே நிலவிவந்த மரபான மாவலிச்சக்கரவர்த்தி கதையாடல் சட்டகத்திற்குள் நுழையாமல் முற்றிலும் தலைகீழான கதையாடலைப் புதிதாக எழுதினார்.
ராவணன் (காலா) வீழ்ந்து, தான் வென்றததாகக் கருதியே ராமன் (ஹரி) தாராவிக்கு வந்து மண்ணை அள்ளுகிறான். அங்கொரு மிகுபுனைவு (Fantacy) நிகழ்கிறது. கூட்டத்திலிருந்து சிறுமி ஒருத்தி கறுப்பு நிறப் பொடியை அவன் கைமண் மீது வீசுகிறாள். தொடர்ந்து கூட்டமே சுற்றி நின்று சிவப்பு, நீலம் என்று வண்ணங்களாக வீசுகின்றது. கறுப்பு நிறத்தைக் கூறி வெறுத்துவந்தவன் வண்ணங்களால் சூழப்பட்டு செய்வதறியாது நிற்கிறான். நிமிர்ந்து பார்க்கும்போது கூட்டத்திலிருந்து ஒருவனாகக் கடந்து செல்லும் காலாவின் முகம் அவனுக்குத் தெரிகிறது. இவ்விடத்தில் நாயக சாகசத்தை மிகுபுனைவு எடுத்துக்கொள்கிறது.
ஹரியை (ராமனை) காலா (ராவணன்) ஜெயிப்பதுபோலக் காட்டுவது சுலபம். அது ஒரு கதையை அப்படியே தலைகீழாக்குவது மட்டுமே. அடிப்படையில் அது ஒரு எதிர்வினை. ஆனால் இங்கு அப்படியல்ல. ஒரு மாயம் நிகழ்கிறது. அங்கு வந்து தோன்றும் காலாவின் முகம், ராவணர்கள் அழிய மாட்டார்கள், தோன்றிகொண்டே இருப்பார்கள் என்பதற்கான குறியீடு. கதையின் முடிவு காலா இறந்தானா, உயிரோடு இருக்கிறானா என்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை. காலா இறந்து போனதாக மக்களும் நம்பவில்லை. அதற்கெல்லாம் முன்பே எல்லோருமே காலாதான் என்றும் அவன் பேசியிருக்கிறான். எனவே கூட்டத்தில் ஒருவனாக வருபவன் காலாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, அங்கு தோன்றுவது காலா அல்ல. காலாக்களில் ஒருவன் என்றாகிறது.
நன்றி- மின்னம்பலம்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி