காலாவில் பயணித்த எம் அப்பாக்கள் - கவிஞர் புதியமாதவி

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள்-கவிஞர் புதியமாதவி

( இந்த திரைப்பட விமர்சன கட்டுரை எழுதியவர் மும்பையில் வாழும் "கவிஞர் புதிய மாதவி" .)

"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு
விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என்
அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறது!
காலாவை திரையில் பார்த்தேன். (செரிடோஸ் ஐமெக்ஸ் அரங்கில்)
நேற்றிரவு தூக்கம் வரவில்லை. காலாவின் வசனங்களில் மட்டுமல்ல
போராட்டங்களிலும் ரத்தங்களிலும் என் அப்பாக்கள் …
அவர்களின் முகம் என்னருகில் வந்தது. அவர்களின் சில பக்கங்களை
நானே புரட்டாமல் இருக்கவே நினைக்கிறேன். அந்தப் பக்கங்களை
காலா என்னைப் புரட்ட வைத்தது. திரையரங்கிலிருந்து வெளியில்
வரும்போது தலை வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கண்பதி உற்சவம்
கடைசி நாள் .. கையில் ஈரக்குலையை ஏந்திக்கொண்டு (ஈரக்குலை என் அம்மாவின் மொழி) இருக்கும் பெண்கள். யார் யாரை வெட்டிச்
சாய்ப்பார்கள்
என்று யாருக்கும் தெரியாது! பெண்கள் அச்சத்துடன் விழித்திருப்பார்கள்.
விடிவதற்குள் அந்தச் செய்தியும் வந்து தொலைக்கும்.
இன்னார் கொலை செய்யப்பட்டார் என்று.
கலவரங்கள் கலவரங்கள் கலவரங்கள்..
எங்கள் வீட்டில் பெரிய சிலம்பு கம்பம் நாங்கள் பெரியவர்களாக வளரும் வரை கபோடின் மூலையில் சாய்ந்திருக்கும்.. அது எதற்காக என்று சில நாட்கள் நான் அறிந்ததில்லை.
ஒரு நாள் அந்தக் கம்பை எடுத்துக் கொண்டு
கை பனியனுடன் ஓடிய என் அப்பா .. அதுவரை நான் பார்த்திராத அப்பா. அப்பாவுக்கு சிலம்பம் தெரியும் என்பதும்
வர்ண அடிகள் தெரியும் என்பதும் அவருக்கு சண்டியர் என்று ஒரு பெயருண்டு என்பதும் அதன் பின் அறிந்தக் கதை.
பிரிட்டிஷ்காரன் வங்கியில் வேலை. அதற்குரிய மிடுக்கான உடை. 7 மொழிகளைச் சரளமாகப் பேசும் அப்பா... இப்படியாகவே இருந்த அப்பாவை அவர்கள் தெருவில் இறங்கிச்
சண்டைப் போட அனுமதித்ததில்லை. நீங்க எதுக்கு அண்ணே.. இங்கேல்லாம்? நாங்க பார்த்துப்போம்..
என்பார்கள். கருக்கலில் அப்பாவை வந்து சந்திப்பார்கள்.
இதெல்லாம் அப்பாவின் அரசியலுக்கும் அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
அப்பாவின் தம்பி பி.எஸ்.கோவிந்தசாமி சேட் .. என் சித்தப்பா தான் அன்றைய கள நாயகன்.
நூறு பேரு கையில் கம்பு அரிவாளுடன் வந்தாலும் அதே புன்னகையில்
ஒரு கையில் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு “ஏலே.. எங்கல வந்து காட்டறீங்க!”
என்று நிற்பார் பாருங்கள்.. அவர் தான் அன்றைக்கு குட்டிவாடி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதவன்.. எங்களுக்கு சொந்த ஊர் பத்தமடை.
அப்பா சிவப்பு சித்தாந்தம் படித்தவர் . கறுப்புச்சட்டைப் போடாத பெரியாரிஷ்ட்.
கறுப்பு சிவப்புக் கொடியை (திமுக )மும்பையில் ஏற்றியவர்.
சித்தப்பா முழுக்க முழுக்க நீல வண்ணத்தில் .. குடியரசுக் கட்சி தலைவர்.
தாராவி கணேசர்கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர்.
..
எஸ்.கே.இராமசாமி.. (பத்தமடை இவர் தாய்மாமா ஊர். இவர் தம்பிகள் தங்கை
படித்ததெல்லாம் பத்தமடை ஸ்கூலில் தான்)ர்இவரும் என் உறவினர். இன்னொரு சித்தப்பா முறை.

இவர் தாதா தான். இவருடைய முதல் மனைவி இறந்தவுடன் அன்றைக்கு இவர்
குரூப்பில் இருந்த 500 பேருக்கும் மேலான அடியாட்கள் மொட்டைப் போட்டுக்கொண்டார்கள்.
என் சித்தியின் கணவரும் அதில் ஒருவர். “எங்களுக்கெல்லாம் அன்னமிட்ட அன்னலட்சுமி
போயிட்டாளே “ என்று அவர் தண்ணி அடிச்சிட்டு வந்து எங்க அம்மாவிடம் அழுதது
கதைகள்.. .. அப்படியே பால்தாக்கரேயின் முகம் .. நிழலாக கூடவே பயணிக்கிறது.
உற்பத்தி சார்ந்த சமூகம் உருவாகி வந்தக் காலக்கட்டத்தில் சொத்துக்களையும்
அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் ஏன் தான் சம்பாதித்த எதையுமே
தன் வாரிசுகளுக்கு என்று ஒதுக்கத்தெரியாத என் அப்பாக்கள்
எல்லாவற்றையும் தன்னுடனும் தன்னுடன் வாழ்ந்த சமூகத்திற்கும் என்று
வாழ்ந்த என் அப்பாக்கள்..
என் அப்பாக்கள் நல்லவர்கள்.வல்லவர்கள். அவர்கள் போராட்டங்களை கலவரங்களை
அடிதடிகளை நான் என் படிப்பின் மோஸ்தரில் புரிந்து கொள்ள மறுத்தேன்.
அவர்களை விட்டு நான் விலகி விலகிப் போனேன்.
காலம் செல்ல செல்ல சமூகம் எனக்கு அவர்களின் உசரங்களை
உணர்த்திக் கொண்டே இருக்கிறது..
இன்று நான் தற்போது இருக்கும் அமெரிக்க மண்ணில் “அப்பாக்களின் நாள்”
(17th June third Sunday)..
தலையைத் தூக்கி அப்பாக்களைப் பார்க்கிறேன்.
How to be Black .. book ..
Baratunde Thurston of Jack & Jill Politics and the Onion
என் மடியில் தன் கனமான பக்கங்களுடன்.
கண்களில் கண்ணீருடன்.. மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து
என் மார்புடன் அணைத்துக் கொள்கிறேன்.
காலா … பா. இரஞ்சித் தின் படம்.
இரஞ்சித்திற்கும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும்
என் அன்பு தம்பி மகிழ் நன், தோழமை ஆதவன் தீட்சண்யா..
மற்றும் திரைக்களத்தில் களமாடிய என் பிள்ளைகள்..
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி