லிப்ட் கொடுத்துவிட்டு, சாதி தெரிந்ததும் அரிவாளால் வெட்டிய கொடூரம்
லிப்ட் கொடுத்துவிட்டு, சாதி தெரிந்ததும் அரிவாளால் வெட்டிய கொடூரம்
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
கடந்த 28.05.2018 அன்று திருப்புவனம் அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் சாதி இந்துக்கள், தலித் குடியிருப்பு மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுப்பப்பட்டு வரும் இந்த வேளையில் மறுபடியும் ஒரு கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
ஏனாதிகோட்டை கிராமத்தில் வசித்து வருகிற பட்டியல் சாதி இந்து பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சந்தனம் (47) என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்புவனம் வந்துள்ளார். திருமணம் முடிந்து 03.06.2018 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் தனது ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்துள்ளார். உரிய பேருந்து கிடைக்காத காரணத்தினால் திருப்புவனம் அருகில் உள்ள தன் தங்கை வீடான பிரமனூர் கிராமத்திற்கு செல்ல நடந்து சென்றிருக்கிறார். இடையில் 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களிடத்தில் சந்தனம் அவர்கள், என்னை பிரமனூர் கிராமத்தில் இறக்கிவிட முடியுமா என்று கேட்டுள்ளார். அவர்களும் வாகனத்தில் ஏற்ற சம்மதித்துள்ளனர். சற்று தூரம் சென்றவுடன் அந்த நபர்கள் உங்கள் பேர் என்ன? எந்த கிராமம்? என்று கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதிலை கூறியிருக்கிறார் சந்தனம். நீங்க என்ன ஆளு? என்று கேட்க நான் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்ல வேண்டமா, வண்டியை விட்டு இறங்குடா என்று கூறி சாதி ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். வயசுக்கு மரியாதை கொடுங்க, எதற்கு சாதி ரீதியாக பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த கும்பல் சந்தனத்தின் கன்னத்தில் அறைந்துள்ளனர். அவரது சட்டையை பிடித்து தாக்கவும் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள் என்று சந்தனம் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கும்பலில் இருந்த ஒருவன் கத்தியால் சந்தனத்தின் பின் தலையில் வெட்டியுள்ளான். நெற்றியிலும் அரிவாள் வெட்டு காயம், இரண்டு கைகளிலும் கத்திக்குத்து. இரத்தம் வழிந்த நிலையில் மயக்கமுற்று கிடந்திருக்கிறார் சந்தனம்.
மறுநாள் சந்தனத்தை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். எம்எல்சி வழக்காக பதிவு செய்யப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். மானாமதுரை டிஎஸ்பி, எவிடன்ஸ் குழுவினரை சந்திக்க வந்திருந்தார். அவரிடத்தில் நடந்த விபரத்தை கூறியதன் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்புவனம் காவல்நிலையத்தில் குற்றஎண்.183/2018 பிரிவுகள் 294(b), 324, 506(2) இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
பரிந்துரைகள்
• கச்சநத்தம் பகுதியில் கொடூரமான படுகொலைகள் நடந்தும் சாதி வெறியர்கள் துணிச்சலுடன் நடமாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே உடனடியாக சிவகங்கை பகுதியை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து சிறப்பு சாதி வன்கொடுமை தடுப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும்.
• நான்கு குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
• பாதிக்கப்பட்ட சந்தனம் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமும் உயர்தர மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்
செயல் இயக்குனர்
Comments
Post a Comment