காலா யாருடைய படம்? - மகிழ்நன் பா.ம

காலா யாருடைய படம்? - மகிழ்நன் பா.ம 

( இந்த கட்டுரை எழுதியவர் தோழர் மகிழ்நன் பா.ம, மும்பை விழித்தெழு இயக்க முதன்மை  ஒருங்கிணைப்பாளர் , காலா திரைப்படத்தில் வசனம் மற்றும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் )
அது பேசும் அரசியல் தாராவியுடையது, என்னுடையது…உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களுடைய நிலவுரிமை பற்றியது, வாழ்வாதார உரிமை பற்றியது…தமிழகத்தில் போதுமான வாழ்வாதார வாய்ப்பு இல்லாத நிலையில் பஞ்சம் பிழைக்க 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இடம்பெயர்ந்து போன தாராவி தமிழர்களின், தாராவியின் பிற உழைக்கும் மக்களை பற்றிய படம்…
நான் தாராவியில் 25 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். எங்களுக்கு சினிமா, அரசியல் எல்லாமே தமிழகத்தின் பிரதிபலிப்புதான். எங்களை பற்றிய அரசியல் எதையும் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ஏதும் பேசி நாங்கள் கேள்விப்பட வில்லை….
எங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலும் அப்படியேதான் இருந்தது. நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்து சேதுசமுத்திர திட்டம், ஈழ பிரச்சினை, மூவர் தூக்கு போன்றவற்றைதான் பிரதானமாக பேசினோம். முள்வேலிகள் குறித்து சேறும், சகதியுமான சால்களில் பேசி திரிந்தோம். ஏதாவது ஒரு கல்லி (Gully)களில் நின்றபடி அரற்றினோம்.
தமிழ்நாட்டிலிருந்து ’புலம் பெயர்ந்து’ வாழும் எங்களின் நிலை பற்றி எவரும் பேசாத நிலையில், எங்கோ இருக்கிற அரசியலை பற்றி பேசி திரிந்தோமே என்ற குற்றவுணர்ச்சியில் இதை சொல்லவில்லை...
எங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக பெயரளவில் சிலர் தமிழகத்திலிருந்து பேசினார்களேயன்றி, உரத்து பேசவேயில்லை என்று சொல்லும் அளவுக்குதான் எழும்பிய சிற்சில குரல்களும் பதிவாயின. தாராவியில் இருக்கும் அந்த மாநகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி இருக்கிறது. தமிழகத்து பாட திட்டம்தான் அரசு பள்ளிக்கு….முறையாக தமிழகத்துல இருந்து பாட புத்தகம் கூட வராது…..தொங்கணும்….தாங்கணும்….அப்பதான் ஒன்னு ரெண்டாது கிடைக்கும்….அது மட்டுமில்லாம தொடர்ந்து அந்த பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன….முறையான மருத்துவ வசதி கிடையாது. வாழ்வாதாரத்திற்கு பிரதான வழி தோல் தொழில், டிரைவர் வேலையும், இட்லி வியாபாரமும்தான்…
என்னையே எடுத்துக்கோங்க, எனக்கு இதுநாள் வரை சாதி சான்றிதழ் கிடையாது, தமிழகத்தில் எவ்வித சொத்தோ, அடையாள அட்டையோ இல்லாத நிலையில்…அதை இன்றுவரை பெற முடியவில்லை. ( இல்லாத நிலைக்க்கு சாதிதான் காரணம்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை). தமிழகத்தில் பட்டியல் சாதி என்ற சமூக பின்புலம் காரணமாகவே வாழ்வாதாரம் தேடி போன இடத்தில் அரசின் பட்டியலில் என் சாதி இல்லாத காரணத்தினால், சிறு சலுகை கூட பெற முடியாமல், பொருளாதார நிர்பந்தங்களின் காரணமாகவும் படிப்பு இடையில் நின்றது…
இப்ப, இப்ப பசங்க நல்லாவே படிக்க தொடங்கிட்டாங்க…. சில மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவானாலும், இன்னும் உயர்கல்வி என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை….
மும்பைக்கு வந்த, வரும் தலைவர்கள் பெரும்பாலும் சேரும், சகதியுமான எங்கள் தெருக்களில் கால் பதித்ததேயில்லை. அப்படியே பதித்தாலும் சுத்தம் செயற்கையாக சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு, வி.ஐ.பி அந்தஸ்தோடு வந்துவிட்டு, எங்கள் வாழ்க்கையை எட்ட நின்று கூட வேடிக்கை பார்க்க நேரமில்லாமல் கிளம்பியதைத்தான் கண்டிருக்கிறேன்.
ஆதிக்க சாதிகளை சார்ந்த , உயர்வர்க்கத்தை சார்ந்த எத்தனையோ நபர்களை தாராவிக்கு அழைத்து சென்றிருக்கிறேன். நெருக்கமாக இருப்பதை போன்ற பாவ்லாவுக்கு அப்பால், ஒருவித அசூயையும் தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். ச்சீ இடத்திலா வாழ்ந்தீங்கங்கிற மாதிரி பார்வை, இரக்கம், கருணை, புடலங்காய்…எல்லாம் வரும்…அவங்க கண்ல….நமக்கு ஆத்திர மயிரா வரும்….
ஆனால், தோழர் ரஞ்சித்துக்கு தாராவி வாழ்க்கை அவ்வளவு நெருக்கமாக இருந்தது. சேரும், சகதியும் அவரை தடை செய்யவில்லை. எவ்வித அசூசையும் இல்லை. தாராவியில் உள்ள பல வீடுகளில் அவர்களுக்கு இன்று உறவாகி போனார்கள். அவர்கள் எங்கள் கண் கொண்டு ஒரு படைப்பை செய்திருக்கிறார்.
அதற்காக, படத்திற்கு சலுகை காட்டுங்கள் என்றெல்லாம் கோர இதை எழுதவில்லை.
ஆனால், இதுநாள் வரைக்கும் சின்ன கவுண்டர், எஜமான், தேவர் மகன் பத்தி மட்டும் வந்த படங்கள், தாராவிய பத்தியே வந்தாலும் ஏதாகிலும் ரவுடிய, கள்ள கடத்தல் பத்திதான் வந்திருக்கு…. நாங்க வாழ்ந்த கதைய இந்த படம் பேசுது… 10 x 10 அடி வீட்டுல இருந்து கண்ட கனவ இந்த படம் பேசும்….
இயக்குனர் இரஞ்சித்தின் படைப்பு எந்த அரசியலை பேச வேண்டுமோ அதை பேசும். வெற்றிகரமாக பேசும். இரஞ்சித்தின் பதில்களை படம் பேசும்….
இந்த படம் சுருக்கமாக…..
வுண்டர்பார்ஸ் தயாரிப்பில்….
ரஜினிகாந்தின் நடிப்பில்….
ரஞ்சித்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான படம்.
படத்தை பார்த்தால் ரஜினிக்கு அப்பால் தாராவியில் வாழ்ந்த, நடமாடும் மனிதர்கள் தெரிவார்கள்…..
காலா என்னும் திரைப்படத்தில் எங்கள் கனவுகளை குறித்து கொஞ்சம் பேசியிருக்கிறோம். நான் வசன பங்களிப்பின் முலம் எங்கள் குரலை பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்…
படம் வெளிவந்த பின் விரிவாக பேசுவோம்....
நன்றி, மகிழ்ச்சி

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி