சட்டத்துறையில் பேரறிஞராக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?

சட்டத்துறையில் பேரறிஞராக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?
≠==================≠
  

தகவல் :-  திரு. கஜேந்திரன்,திருவள்ளுவர் நலச்சங்கம் , மும்பை

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களே அதைப்பற்றி கூறுகிறார்
"நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது (Director of Education) ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.
என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால், சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர், அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர, தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தை சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று “பாரிஸ்டர்’ ஆகத் திரும்பினேன். நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2,000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால், நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும், நான் இப்பணியை ஏற்கவில்லை.

1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் “வைசிராய் நிர்வாகக் குழு’வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்த ஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்".

(27.10.1951 அன்று, ஜலந்தரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை)
நன்றி - Dr.Ambedkar Intellectuals Society, Chennai

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி