கால்பந்து பிதாமகன் 'பீலே' வுக்கு பெங்களூரில் சிலை வைத்த தமிழர்கள்- இரா.வினோத்
கால்பந்து பிதாமகன் 'பீலே' வுக்கு பெங்களூரில் சிலை வைத்த தமிழர்கள்- இரா.வினோத் (2014 இல் வந்த கட்டுரை )
உலகக் கோப்பை கால்பந்து போட்டி களைகட்டி இருக்கும் வேளையில் பெங்களூரில் உள்ள கவுதமபுரத்துக்குள் நுழைந்தால் எங்கெங்கும் 'பீலே' ஜெர்ஸி அணிந்த இளைஞர்கள், நெய்மர் ஹேர் ஸ்டைலில் உலா வரும் மாணவர்கள், தெரு முக்குகளில் பெரிய அளவிலான கால்பந்து, ஆங்கங்கே பிரேசில் வெற்றி பெறவேண்டி கட் அவுட்கள், பேனர்கள், எல்.இ.டி. தொலைக்காட்சிகளில் விடிய விடிய மேட்ச்… என மொத்தத்தில் 'லிட்டில் பிரேசிலாக' காட்சி அளிக்கிறது.
பெங்களூரின் 'லிட்டில் பிரேசில்' என அழைக்கப்படும் கவுதம புரத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கும் வகையில் நகரின் முற்றத்தில் அண்ணல் அம்பேத்கர், அன்னை தெரசாவின் சிலையை தொடர்ந்து கால்பந்து பிதாமகன் பீலேவின் சிலையும் கம்பீரமாக நிற்கிறது. கவுதமபுரத்தின் பழைய பெயர் 'கன் ட்ரூப்'. இங்கு வசிக்கும் 99% பேர் தமிழர்கள்.
“சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கும் இங்கிருந்து, எந்த வசதியும் இல்லாமலே சர்வதேச, தேசிய, மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் 302 பேரை இதுவரை உருவாக்கியுள்ளோம்.
எங்கள் பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து ஃபுட்பால் தான் எங்களுக்குத் தெரிந்து ஒரே விளையாட்டு. 1891-ல் இங்கு கால்பந்து போட்டிகள் நடந்ததற்கான புகைப்படங்கள் இருக்கின்றன. கன் ட்ரூப்பில் இருக்கும் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கால்பந்து கலந்திருக் கிறது. என்னதான் கிரிக்கெட், டென்னிஸ் என அக்கம் பக்கத்து ஏரியாவில் விளையாடினாலும் எங்களுக்கு கால்பந்து தான் பிடிக்கும்.
அதிலும் பிரேசில் நாட்டுக்காக 3 உலகக் கோப்பைகளில் பீலே திறம்பட விளையாடிய போதுதான் கால்பந்து மீதான காதல் எங்களுக்கு இன்னும் அதிகமானது.
எனவே இங்குள்ள 25 கால்பந்து அணிகளும் சேர்ந்து 2001-ல் பீலேவுக்கு சிலை வைத்தோம்” என பெருமையோடு விவரிக்கிறார் இங்குள்ள ஜோசப் கிறிஸ்டினோ.
#ஒலிம்பிக்கில் முதல் தங்கம்
“பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 'கன் ட்ரூப்' கால்பந்து அணி என்றால் மைசூர், கேரளா, மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என பல ஊர் அணிகளும் பயப்படுவார்கள். அந்தக் காலத்தில் வெயில், பனி, மழை என எதையும் பொருட்படுத்தாமல் பயிற்சி செய்து, அதுவும் 'ஷூ' போடாமல் வெறுங்காலிலேயே பிரிட்டிஷ்காரர்களை வீழ்த்தி எங்ககள் முன்னோர்கள் கோப்பை வென்றிருக்கிறார்கள்.
1948-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் எங்க ஏரியாவில் இருந்து சென்ற சதார் பஷீர் தான் கால் பந்தாட்டத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்தார். அதேபோல 'இந்தியாவின் பீலே' என அழைக்கப்படுகிற பீ.கண்ணன் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கால்பந்தில் தங்கப்பதக்கம் வாங்கி வந்தார். நாட்டின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும்
'கருப்பு முத்து' என்.உலகநாதனும் எங்க ஏரியாவை சேர்ந்தவர்தான்.
இவர்கள் மட்டுமல்ல நம் நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடிய ஜெகநாதன், அலெக் ஸாண்டர், அருமைநாயகம், சுந்தரராஜன் என பலர் அந்தக் காலத்தில் வெறுங்காலோடு விளையாடி பல விருதுகளை குவித்துள்ளனர்” என்கிறார் பெட்டிக் கடை வைத்துள்ள, முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முருகன்.
#வேலை வாய்ப்பில்லை
“கவுதமபுரத்தில் கால்பந்து மிக நன்றாக விளையாடக்கூடிய 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்போது உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல் ரூ.5 ஆயிரம், ரூ. 10 ஆயிரத்துக்கு தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். பலர் தாங்கள் நேசித்த விளையாட்டை கைவிட முடியாமலும், வறுமையில் தவிக்கும் குடும்பத்தை காப்பாற்ற முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி குடிகாரர்களாக விட்டனர். எனக்குத் தெரிந்து 2 - 3 கால்பந்து வீரர்கள் தற்கொலை கூட செய்துகொண்டார்கள்.
ஒவ்வொரு ஊருக்கும் நூல கமும், விளையாட்டு மைதா னமும் ரொம்ப அவசியம். ஆனால் இத்தனை கால்பந்து வீரர்களை நாட்டுக்கு அர்ப்பணித்த கவுதம புரத்துக்கு நல்ல மைதானம் கூட இல்லை.
இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்” என்று வேதனைப்பட்டார் சி.ரவிக்குமார்.
1980-களில் இந்திய கால் பந்து அணிக்காக 6 முறை விளையாடிய இவர், தற்போது எச்.ஏ.எல். கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
ஜொலிக்கும் ஏழைத் தமிழர்கள்
கவுதமபுரத்தில் வசிப்பவர் களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் தலித்துகள். காலை முதல் நள்ளிரவு வரை களத்தில் வெறுங்காலோடு விளையாடுகின்றனர்.
பகலில் தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் செல்லும் ஜெனார்த்தன் (22), சதீஷ் (24) ஆகிய இருவரும் கர்நாடக அணிக்காக விளையாடுகின்றனர்.
அதேபோல பெங்களூர் மாநகர அணிக்காக விளையாடும் கிருத்திகா தற்போது 11-ம் வகுப்பு மாலைப் பள்ளியில் படிக்கிறார். இவரது தந்தை கதிரவன் தற்போது இந்திய அணிக்காகவும், அண்ணன் கர்நாடக அணிக்காகவும் நிறைய கனவுகளுடன் விளையாடி வருகிறார்கள்.
Comments
Post a Comment