பண்டிதர் அயோத்திதாசரின் 'தமிழன்' இதழுக்கு 111 வயது -- இரா.வினோத்
பண்டிதர் அயோத்திதாசரின் 'தமிழன்' இதழுக்கு 111 வயது!
===================================================
- இரா.வினோத்
===================================================
- இரா.வினோத்
இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’ இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு ‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியப் பங்குண்டு.
சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார் அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது. ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர். ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’ ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார் தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர். இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல் வெளியிட்டார்.
பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட ‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர கருத்துகள் இடம்பெற்றன. இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை, வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில் நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.
சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர், ‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’ உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு ‘தமிழ’னில் எழுதினார். இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார் போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர். இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல் காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள் பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால், தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்! 5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன் பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது. பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ் ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம் ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.
நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட ‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது. எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத் தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழிகாட்டுகிறது!
(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 111 ஆண்டுகள் ஆகின்றன.)
-இரா.வினோத்
நன்றி : தி இந்து
19.6.2017
==============================================================================
19.6.2017
==============================================================================
அயோத்திதாசர் விருது கட்டுரையாளர்களை சென்றடையட்டும்!
செ
ன்னையில் 1845-ல் பிறந்தவரான அயோத்திதாசர், சமூக விடுதலைக்கான முன்னோடிகளில் ஒருவர் மட்டும் அல்ல; தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடிகளிலும் ஒருவர். எழுத்தை சமூக விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான கருவியாகக் கை கொண்டவர். தமிழ் தவிர சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை கொண்ட ஆளுமையான அயோத்திதாசர் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாகவும் இருந்தவர். நவீன தமிழகத்தின் சாதி ஒழிப்புக்கான முன்னோடி குரல்களில் ஒன்று அவருடையது.
திராவிட மொழிக் குடும்பம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர்களிடையே மட்டும் புழங்கிவந்த ‘திராவிடம்’ என்ற சொல்லை ஒரு அரசியல் சொல்லாடலாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியும் அயோத்திதாசர். ரெவரெண்ட் ஜான் ரத்தினத்தோடு சேர்ந்து 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ வார இதழை அயோத்திதாசர் தொடங்கினார். 1891-ல் ‘திராவிட மகாஜன சபா’ அமைப்பை உருவாக்கினார். 1909-ல்
அயோத்திதாசர் மறைந்துவிடுகிறார். இதற்குப் பின்னரே நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிடக் கட்சிகள் என்று திராவிட இயக்க வரலாறு தொடங்குகிறது என்றாலும், அந்தச் சிந்தனை மரபில் முன்னோடியாகப் போற்றக்கூடியவரே அயோத்திதாசர். எனினும், அரசு சார்ந்த அவருக்கான அங்கீகாரம், அவர் நினைவைப் போற்றும் செயல்பாடுகள் என்பன இங்கு மிகக் குறைவு. இப்படிப்பட்ட சூழலில்தான் அயோத்திதாசர் பெயரில் ஒரு விருதை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
மிகுந்த வரவேற்புக்குரிய ஒன்று இது. அதேசமயம், இந்த விருது யாருக்கு வழங்கப்படப்போகிறது என்பதில் ஒரு தெளிவு இல்லை. “சமத்துவம், பொதுவுடமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனிமுத்திரை பதித்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் லட்சிய நோக்குடன் செயலாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தவரும் இந்த விருதைப் பெறலாம் எனும் பொதுத்தன்மையைக் கொண்டிருக்கிறது. அப்படி அளிப்பது அந்த விருதுக்கு ஒரு தனித்த அடையாளத்தை வழங்காது. அரசு கொண்டிருக்கும் நல்ல நோக்கம் காலப்போக்கில் சிதைந்துவிடவே அது வழிவகுக்கும்.
எந்த எழுத்தை அயோத்திதாசர் தன்னுடைய பிரதான ஆயுதமாகக் கையாண்டாரோ அந்த எழுத்துத் துறையைச் சார்ந்தோருக்கே இந்த விருதை அளிப்பதே பொருத்தமானதாக இருக்கும். பத்திரிகையாளர்கள் / ஆராய்ச்சியாளர்கள் / கட்டுரையாளர்களுக்கான விருதாக இது அமைய வேண்டும். சமூகநீதி, சமத்துவத்துக்கான குரலாக எதிரொலிப்போரை இந்த விருது சென்றடைய
வேண்டும்!
வேண்டும்!
======================================================================
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தலைவர்கள் என்று பலருக்கு ஆதர்சமாக இருப்பவர் அயோத்திதாசப் பண்டிதர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட களாக்கப்பட்டார்கள் எனும் கருத்து கொண்டவர் அவர்.
இதுதொடர்பாகப் பல கட்டுரைகளையும் எழுதியவர். ஆரியர்களுக்கு எதிராகத் திராவிடர்கள் எனும் பதத்தைப் பயன்படுத்தியதுடன், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாகவும் இருந்தவர். 19-ம் நூற்றாண்டில் புரட்சிகரமான கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைத்தவர். இதழாசிரியர், சமூக சேவகர், தமிழ் அறிஞர், சித்த மருத்துவர் என்று பல முகங்களைக் கொண்ட ஆளுமை அவர்.
1845 மே 20-ல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர். தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் கந்தப்பன். நீலகிரிக்குக் குடிபெயர்ந்த அயோத்திதாசர், தோடர் இன மக்களை ஒன்றிணைத்து ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை உருவாக்கினார்.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆளாவதைக் கடுமையாக எதிர்த்தார். இந்து மதம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதியரீதியாக ஒடுக்குவதாகக் கருதிய அவர், இந்து மதத்தைத் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஆதித் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று கூறியவர் அவர். பின்னாட்களில் புத்த மதத்தைத் தழுவிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களும் புத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னையில் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்திவந்த டி.ஜான் ரத்தினத்தின் தொடர்பு அயோத்திதாசரின் சிந்தனைகளை மேலும் வளர்த்தது. ஜான்ரத்தினம் நடத்திவந்த ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழில் அயோத்திதாசர் பணி புரிந்தார். பின்னாட்களில் (1907-ல்) ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை நடத்த இந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது.
சென்னை ராயப்பேட்டையில் அச்சாகி புதன்கிழமைதோறும் வெளியான இந்த இதழில், புத்தமதம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். அடக்குமுறைகளுக்குக் காரணமான சாதிய அமைப்பைக் கண்டித்தார். ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’, ‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார்.
சமூக விடுதலைக்காகப் போராடிய பல தலைவர்களுக்கு முன்னோடியாக இருந்த அயோத்திதாசர், 1914-ல் தனது 69-வது வயதில் காலமானார்
Comments
Post a Comment