பெரியாரை ஏன் மதிக்கிறேன்?
P A Krishnan ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது நடந்திராத ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த முதல் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொடிய அடக்குமுறை அவிழ்த்து விடப் பட்டது என்பது பலர் அறிந்திராத ஒரு தகவல். காங்கிரஸ் அரசாங்கம் புரட்சி என்ற சொல்லையே வேரோடு இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் அந்தக் காலகட்டத்தில் எடுத்த நிலைப்பாடு தவறு என்று இன்று தெரிந்தாலும், அன்று கம்யூனிஸ்டு இயக்கத்திற்காக பல தோழர்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். 1944லேயே தொழிற்சங்கத...